சிங்கப்பூரில் டெங்கிச் சம்பவங்கள் குறைவாக இருக்கின்றன. அதேவேளை, சிங்கப்பூரில் பரவலாகக் காணப்படும் டெங்கிக் கிருமி வகையில் காணப்படும் மாற்றத்தால் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தேசிய சுற்றுப்புற வாரியம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இவ்வாண்டு முற்பாதியில் 1,180 டெங்கிக் காய்ச்சல் பாதிப்பு பதிவாகின. அதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு பதிவான 2,583 சம்பவங்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை குறைவாகும்.
அண்மைய ஆண்டுகளில் சிங்கப்பூரில் டெங்கிக் காய்ச்சல் ஏற்படுவது குறைந்துள்ளன. ஏடீஸ் கொசுக்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் வோல்பாக்கியா திட்டம் விரிவுபடுத்தப்பட்டது அதற்குக் காரணம்.
எனினும், டெங்கிக் காய்ச்சல் பொதுவாக அதிகம் பதிவாகும் மே முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. பரவலாகக் காணப்படும் கிருமி வகையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது இதற்குக் காரணம்.
டிஇஎன்வி-3
கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட டெங்கிச் சம்பவங்களில் 59.9 விழுக்காடு டிஇஎன்வி-3 வகையுடையதாகும். கடந்த ஜனவரியில் அவ்விகிதம் 19.1 விழுக்காடாக மட்டுமே இருந்தது.
தேசிய சுற்றுப்புற வாரியத்தின் காலாண்டு டெங்கிக் கண்காணிப்புப் புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அப்புள்ளிவிவரங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) வெளியிடப்பட்டன.
நான்கு வகை டெங்கிக் கிருமிகள் இருக்கின்றன. அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையவையாக இருந்தாலும் அவற்றுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன.
ஒருவகை டெங்கிக் கிருமித்தொற்றுக்கு ஆளாபவர் மற்ற மூன்று வகை கிருமிகளில் ஒன்றின் தொற்றுக்கும் ஆளாகவும் வாய்ப்புள்ளது.
பொதுவாக, பரவலாகக் காணப்படும் கிருமி வகையில் மாற்றம் ஏற்படும்போது சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
புதிய வகைக் கிருமிக்கு உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகம் இல்லாமல் இருப்பது அதற்குக் காரணம்.
மலேசியாவிலும் டெங்கிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதற்கு, பரவலாகக் காணப்படும் கிருமி வகையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


