ஜனநாயகம் சிக்கலுக்கு உள்ளானதற்குச் சில அரசாங்கங்களே காரணம்: எட்வின் டோங்

ஜனநாயகம் சிக்கலுக்கு உள்ளானதற்குச் சில அரசாங்கங்களே காரணம்: எட்வின் டோங்

2 mins read
ac76edf3-dad0-400f-8d69-6e452e098f60
சமூக நலன்களைப் புரிந்துகொள்ளாமல் ஜனநாயகத்தை மதிப்பிட இயலாது என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார். - படம்: உலகப் பொருளியல் கருத்தரங்கு

ஜனநாயகம் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பதற்குச் சில அரசாங்கங்கள் சரிவரச் செயல்படாததே காரணம் என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் கூறியிருக்கிறார்.

கட்டமைப்பில் இயல்பாக உள்ள தவறுகள் அதற்குக் காரணமல்ல என்றார் அவர்.

சில அரசாங்கங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, முறையற்ற வழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவ்வாறு முறையற்ற வழிகளில் அதிகாரத்தில் நீடித்து அவை பதவியைத் தவறாய்ப் பயன்படுத்துவதாகத் திரு டோங் குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளியல் கருத்தரங்கில் அவர் பேசினார். “ஜனநாயகம் பிரச்சினையா?” எனும் தலைப்பில் வியாழக்கிழமை (ஜனவரி 22) இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் டோங் அந்தக் கருத்துகளை முன்வைத்தார்.

அதனால் குடிமக்களில் பலர் அத்தகைய நடைமுறைகளில் நம்பிக்கை இழந்திருப்பதாக அவர் சொன்னார்.

சில அரசாங்கங்கள், சமூகத்தை முன்னேற்றவேண்டிய கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திரு டோங் கூறினார்.

மக்களுக்கு அமைப்புகளின் மீதான நம்பிக்கை போய்விட்டது. முந்திய தலைமுறைகளைக் காட்டிலும் இப்போது தவறான தகவல்களை அவர்கள் அதிகம் சந்திக்கவேண்டியுள்ளது. பல தேர்தல்களை அவை ஆட்டங்காணச் செய்துள்ளன.

“ஜனநாயகம் சிக்கலுக்கு உள்ளாவதற்கு அத்தகைய அம்சங்களே காரணம் என நான் நினைக்கிறேன்,” என்று அமைச்சர் டோங் கூறினார்.

சமூக நலன்களைப் புரிந்துகொள்ளாமல் ஜனநாயகத்தை மதிப்பிட இயலாது என்று அவர் வலியுறுத்தினார்.

“மக்கள் நேர்மையான, நியாயமான தேர்தல்களின் மூலம் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அதற்குக் கைம்மாறாக, மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, சமுதாயத்தை உருவாக்கி, முந்திய தலைமுறையினரைவிடச் சிறந்த நிலையை ஏற்படுத்துவது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கடமை,” என்றார் அமைச்சர் டோங்.

கலந்துரையாடலில் அரசியல் கட்டமைப்பின் எதிர்காலம் குறித்து அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும் பல்வேறு கருத்துகளை விவாதித்தனர்.

ஒட்டுமொத்தத்தில், உலக அளவில் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்க அது காலத்திற்கேற்ப உருமாற வேண்டும் என்ற இணக்கம் காணப்பட்டது.

குறிப்புச் சொற்கள்