டெரி சூவிற்கு எதிரான அவதூறு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் அமைச்சர்கள் சண்முகம், டான் சீ லெங் சாட்சியம்

டெரி சூவிற்கு எதிரான அவதூறு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் அமைச்சர்கள் சண்முகம், டான் சீ லெங் சாட்சியம்

2 mins read
6b3e9d02-4b05-4646-8c1d-2cda21322a23
வியாழக்கிழமை (பிப்ரவரி 26) உயர் நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற உள்துறை மற்றும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கா. சண்முகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமைச்சர்கள் இருவர் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்காக வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 26) நடைபெற்ற வழக்கு விசாரணை தொடர்பாக ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ (டிஓசி) ஊடகத்தின் தலைமை ஆசிரியர் டெரி சூ உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.

சொத்துப் பரிமாற்றங்கள் குறித்து டிஓசி இணையச் செய்தித்தளத்தில் வெளியான புளூம்பர்க் கட்டுரை தொடர்பான அந்த அவதூறு வழக்குகளில் டெரி சூ முன்னதாகத் தமது தரப்பு விளக்கத்தைத் தாக்கல் செய்யவில்லை. மேலும், அவரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் யாரும் பிரதிநிதிக்கவில்லை.

உள்துறை அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா. சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இருவரும் உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். தாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரங்களை உறுதிப்படுத்த சிறிது நேரம் அவர்கள் சாட்சிக்கூண்டில் ஏறினர்.

சாட்சியம் அளித்தபோது அமைச்சர்கள் இருவரும் தங்களது பதவிக்கால தேதிகள் குறித்த நீதிபதி ஆட்ரி லிம்மின் சில கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

அமைச்சர்கள் இருவரையும் மூத்த வழக்கறிஞர் தவீந்தர் சிங் பிரதிநிதித்தார் அவர் தமது தொடக்க உரையினைச் சமர்ப்பித்தார். இருப்பினும், கோரப்படும் இழப்பீட்டுத் தொகை எவ்வளவு என்பதை அவர் அதில் குறிப்பிடவில்லை.

திரு சூ தமது தரப்பு வாதத்தைத் தாக்கல் செய்யத் தவறியதன் விளைவாக அமைச்சர்கள் முன்வைத்த புகாரில் உள்ள உண்மைகளை அவர் ஒப்புக்கொண்டதாகவே கருதப்படும் என்று திரு சிங் தமது உரையில் குறிப்பிட்டார்.

அரைமணி நேர விசாரணையின் முடிவில், இறுதி வாதங்களை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு திரு சிங்கிற்கு நீதிபதி ஆட்ரி லிம் உத்தரவிட்டார். மேலும், அந்த ஆவணங்களைத் தாக்கல் செய்த ஏழு நாள்களுக்குள் டெரி சூவின் மின்னஞ்சல் முகவரிக்கும் தைவானில் உள்ள அவரது முகவரிக்கும் அவை நேரில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்