போலித் தங்கம் அதிகரிப்பு; விற்பனையாளர்கள் எச்சரிக்கை

போலித் தங்கம் அதிகரிப்பு; விற்பனையாளர்கள் எச்சரிக்கை

2 mins read
95f5c05c-9745-427f-ba8c-e1b07452612c
போலித் தங்கம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

உண்மையான தங்கம் போலவே தென்படும் போலித் தங்கப் பொருள்களின் புழக்கம் சந்தையில் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூரின் சில தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் போலித் தங்கம் தொடர்பில் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதைக் காட்டிலும் இம்முறை 50 விழுக்காடு கூடுதலான புகார்களைக் காவல்துறையிடம் அளித்திருப்பதாக விற்பனையாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

வாரத்துக்கு ஐந்து போலித் தங்கப் பொருள்கள் வரை விற்கப்படுவதைத் தான் கண்டிருப்பதாக அவர் கூறினார்.

ஜனவரியில் தங்க விலை முதன்முறையாக 5,100 அமெரிக்க டாலரைத் (6,523 வெள்ளி) தொட்டது. அதன் பிறகு விலை சற்றே குறைந்திருந்தாலும் இன்னமும் 4,000 டாலருக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக இணைய விற்பனைத் தளங்கள், சமூக ஊடக மறுவிற்பனைத் தளங்கள் ஆகியவற்றுக்கு இது பொருந்தும்.

கடந்த பிப்ரவரியில் தங்கள் தளத்தில் தங்கப் பொருள்களுக்கான தேடல், ஆண்டு அடிப்படையில் 17 விழுக்காடு அதிகரித்ததாக கரோசல் மின்வர்த்தகத் தளம் தெரிவித்தது.

நேரடியாகச் சென்று வாங்கும் கடைகளில் போதுமான தங்கம் விற்கப்படாததால் சமூக ஊடகத் தளங்கள்வழி விற்பனை இடம்பெறுவது பிரபலமாகி வருவதாக சிங்கப்பூரில் இயங்கும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள, மதிப்புமிக்க உலோகப் பொருள் நிறுவனமான மெட்டல் & பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குவெக் சியாவ் பின் கூறினார்.

தனியார் சந்தையில் தங்கம் வாங்குவோருக்காக அவர் டெலிகிராம் குழு ஒன்றை நடத்துகிறார். உண்மையான தங்கத்தை வாங்குவோர் அதனை உடனடியாகப் பெற விரும்புவர். மதிப்புமிக்க உலோகக் கடைகளிலிருந்து தங்கத்தை வாங்க முடியாதோர் இரண்டாம்நிலைச் சந்தைகளில் வாங்க முயற்சி செய்வதாக அவர் சிஎன்ஏயிடம் சொன்னார்.

இரண்டாம்நிலைச் சந்தைகள் மூலம் போலி தங்கப் பொருள்கள் நுழைவதாக விற்பனையாளர்கள் கூறினர். பெரும்பாலான வேளைகளில் அவை வெளிநாடுகளிலிருந்து வருகின்றன.

தாங்கள் விற்கும் பொருள்களின் நம்பகத்தன்மை குறித்து எல்லா இணைய வர்த்தகர்களும் உண்மையாக இருப்பதில்லை என்றார் கோல்ட்சில்வர் சென்ட்ரல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரையன் லான் சோங்பிங்.

தனியார் சந்தையில் தங்கம் வாங்குவோரே அதிகம் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர் என்று விற்பனையாளர்கள் எச்சரித்தனர். விலை நம்ப முடியாத அளவுக்குக் குறைவாக இருந்தால் அது ஏமாற்றுச் செயலுக்கான முக்கிய அறிகுறி என்றும் அவர்கள் சுட்டினர்.

குறிப்புச் சொற்கள்