சில்லறை வாடிக்கையாளர்களுக்கு ‘மின்னிலக்க வில்லை’ வடிவில் தங்கம் விற்கும் டிபிஎஸ்

சில்லறை வாடிக்கையாளர்களுக்கு ‘மின்னிலக்க வில்லை’ வடிவில் தங்கம் விற்கும் டிபிஎஸ்

2 mins read
dbadffbd-c912-4495-af2d-2fb2b80990e8
தனது மின்னிலக்க வங்கிச் செயலி வழியாக ‘டிபிஎஸ் தங்க மின்னிலக்க வில்லை’ விற்பனை இவ்வாண்டுப் பிற்பாதியிலிருந்து தொடங்கும் என்று டிபிஎஸ் தெரிவித்துள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

சொத்து மதிப்பு அடிப்படையில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய வங்கியான டிபிஎஸ் குழுமம், சில்லறை வாடிக்கையாளர்களுக்கு மின்னிலக்க வில்லை வடிவில் தங்க (tokenised physical gold) விற்பனையைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

தங்கத்திற்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், சிங்கப்பூரைத் தங்க வணிக மையமாக மாற்ற அரசு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவாகவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

பணவீக்கம், புவிசார் அரசியல் பதற்றங்கள், சந்தை ஏற்ற இறக்கங்கள் ஆகியவை காரணமாக இவ்வாண்டின் தொடக்கத்தில் ஓர் அவுன்ஸ் தங்கம் 5,600 அமெரிக்க டாலர் என்ற சாதனை விலையை எட்டியது.

இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 10) ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,111.95 அமெரிக்க டாலராகக் குறைந்தது. இவ்வாண்டு மார்ச் 23க்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான விலை.

இத்தகைய விலை ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் தங்கம் இன்னும் மதிப்புமிக்க சேமிப்பாகவே பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து, தனது மின்னிலக்க வங்கிச் செயலி வழியாக ‘டிபிஎஸ் தங்க மின்னிலக்க வில்லை’ விற்பனை இவ்வாண்டுப் பிற்பாதியிலிருந்து தொடங்கும் என்று வியாழக்கிழமை ஓர் அறிக்கை வழியாக டிபிஎஸ் தெரிவித்துள்ளது.

சில்லறை வாடிக்கையாளர்கள் ஒரே தளத்தின் மூலம் மின்னிலக்க முறையில் தங்கத்தைப் பெறவும், வைத்திருக்கவும், வணிகம் செய்யவும் அனுமதிக்கும் சிங்கப்பூரின் முதல் முயற்சி இதுவாகும்.

மின்னிலக்க வில்லையாக்கம் (Tokenisation) என்பது ஒரு மெய்யான சொத்தின் (real asset) உரிமையை மின்னிலக்க வில்லையாக மாற்றுவதைக் குறிக்கிறது. அதனை மின்னணு முறையில் வணிகம் செய்ய முடியும்.

ஒவ்வொரு வில்லையும் ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும். அந்தத் தங்கம், சிங்கப்பூரில் டிபிஎஸ் வங்கி அதற்கென்றே உருவாக்கும் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

வாடிக்கையாளர்கள் சிறிய அளவிலும் தங்கத்தை வாங்கலாம்; 24 மணி நேரமும் வணிகம் செய்யலாம்; தேவைப்படின் மின்னிலக்க வில்லைகளை உண்மையான தங்கமாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்று டிபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்டிபிஎஸ்தங்கம்விற்பனை