பணப் பரிவர்த்தனைச் சேவைகளில் டிபிஎஸ் புதிய கட்டுப்பாடு

பணப் பரிவர்த்தனைச் சேவைகளில் டிபிஎஸ் புதிய கட்டுப்பாடு

1 mins read
a8549166-2a7a-4851-a932-5beba6e387c3
புதிய பரிவர்த்தனைகளுக்கான டிபிஎஸ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் 2026 மார்ச் 7 முதல் நடப்பிற்கு வரவுள்ளன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

புதியவர் ஒருவர்க்குப் பணத்தை அனுப்ப விரும்பும் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்கள், அவரது பெயரைப் பதிவுசெய்த 12 மணி நேரத்திற்குப் பிறகே அதனைச் செய்ய முடியும்.

வரும் மார்ச் 7ஆம் தேதியிலிருந்து புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.

புதியவருக்கு பணத்தை அனுப்புவதற்காக அவரது பெயரைச் சேர்க்கவும், உள்ளூர், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைக்கான ஒருநாள் வரம்புகளை மாற்றவும் அல்லது தொடர்பு விவரங்களை மாற்றவும் விரும்பும் வாடிக்கையாளர்கள் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

தற்போது இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாக முடிக்க முடியும்.

அதிகரித்துவரும் அதிநவீன மோசடிகளுக்கு எதிராக வங்கிக் கணக்குகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு புதிய கட்டுப்பாடு இடம்பெறுவதாக பிப்ரவரி 20ஆம் தேதி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் டிபிஎஸ் தெரிவித்துள்ளது.

“உதாரணமாக, மோசடிப் பேர்வழி ஒருவர் புதிய நபரை பணப் பரிவர்த்தனைக்குச் சேர்க்கவோ பரிமாற்ற வரம்புகளை அதிகரிக்கவோ முயற்சி செய்தால் அவற்றை உடனடியாகச் செய்ய முடியாது. 12 மணி நேரத்திற்குப் பிறகே அது நடைமுறைக்கு வரும். அதற்குள்ளாக வங்கிக் கணக்கின் உரிமையாளர்கள், புதிய மாற்றம் குறித்து அவர்கள் வங்கியில் பதிவுசெய்துள்ள தொடர்புகள் வழியாக எச்சரிக்கப்படுவர். அது உண்மை இல்லையெனில் வாடிக்கையாளர்கள் உடனடியாகப் புகாரளிக்க முடியும்,” என்று டிபிஎஸ் வங்கி விரிவாகத் தெரிவித்துள்ளது.

ஓசிபிசி, யூஓபி ஆகிய வங்கிகளும் அதிக ஆபத்துள்ள செயல்பாடுகளைத் தவிர்க்க இதேபோன்ற காத்திருப்புக் காலத்தை செயல்படுத்தியுள்ளன.

குறிப்புச் சொற்கள்