வீட்டு வேலைகள் தொடர்பாக தனது தாயாருடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ஒரு பெண் தனது தாயாரின் முகத்தில் அறைந்து, குத்தி, பேனாக் கத்தியைக் காட்டி மிரட்டினார்.
குற்றவியல் மிரட்டல் மற்றும் வேண்டுமென்றே காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், டிசம்பர் 16ஆம் தேதி மாவட்ட நீதிமன்றம் அவரது செயல்களுக்காக அந்த மகளுக்கு 10 வாரச் சிறைத்தண்டனை விதித்தது.
துன்புறுத்தல் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உத்தரவை மீறியதற்காக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.
மாதர் சாசனத்தின் கீழ் அவர்கள் பாதுகாக்கப்படுவதால், இரு பெண்களின் பெயரையும் குறிப்பிட முடியாது. அக்டோபர் 1, 2014 அன்று தனது மகளிடமிருந்து பாதுகாக்கப்பட, அந்தத் தாயாருக்கு தனிநபர் பாதுகாப்பு உத்தரவு வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
39 வயதான அந்தப் பெண்ணுடைய மகனின் பள்ளிக்கு அருகில் தனது 59 வயது தாயாரின் வீடு இருந்ததால், அவரது வீட்டிலேயே அவர்கள் இருவரும் வசித்து வந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டின.
அக்டோபர் 10ஆம் தேதி மதியம் 1 மணியளவில், முந்தைய நாள் இரவு மது அருந்திய பின்னர், அந்தப் பெண் தனது தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றியவுடன், அந்தப் பெண் தன் தாயை நோக்கி நகர்ந்து, அவரது முகத்தின் இடது பக்கத்தில் குத்தியவுடன் கன்னத்தில் அறைந்தார்.
பின்னர் மேசையில் இருந்து மடக்கப்பட்டிருந்த ஒரு பேனாக் கத்தியை எடுத்து அதன் நுனியை தனது தாயின் மார்பில் வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
பயந்துபோன அந்தத் தாய், பக்கத்துக்கு வீட்டுக்கு ஓடி, அங்கிருந்து காவல்துறையை அழைத்தார்.
அக்டோபர் 14ஆம் தேதி மகள் கைது செய்யப்பட்டு, மனநல மதிப்பீட்டிற்காக மனநலக் கழகத்தில் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.
அந்தப் பெண் நடத்தை மற்றும் சரிசெய்தல் கோளாறுகளால் அவதிப்படுவதாக மனநலக் கழக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


