ஈரான் போரால் சிங்கப்பூரில் தினசரி செலவுகள் கூடின

ஈரான் போரால் சிங்கப்பூரில் தினசரி செலவுகள் கூடின

2 mins read
எரிபொருள் செலவு கூடியுள்ளதால் பல்வேறு பொருள்களின் விலைகள் கூடியுள்ளன
9e459ebf-0263-45c3-a4b0-6a469f0e7be9
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கட்டுமானம், போக்குவரத்து, விநியோகச் சங்கிலி ஆகிய வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரானைத் தாக்கின.

இதற்குப் பதிலடி தரும் விதமாக ஈரான் மிகமுக்கியமான கப்பல் பாதையாக உள்ள ஹோர்முஸ் நீரிணையை மூடியது.

இதனால் உலக நாடுகள் பல போதிய எரிபொருள் விநியோகம் இல்லாமல் தடுமாறுகின்றன.

ஈரான் போரால் பல நாடுகளில் உடனடியாகப் பொருளியல் தாக்கம் இருந்தன. ஆனால் சிங்கப்பூரில் அதன் தாக்கம் கட்டுக்குள் இருந்தது.

வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவு, பெட்ரோல் சில லிட்டர் மட்டும்தான் நிரப்ப அனுமதி உள்ளிட்டவை சிங்கப்பூரில் அமல்படுத்தப்படவில்லை. அதேபோல் இருப்பில் உள்ள எரிபொருள்களையும் சிங்கப்பூர் பயன்படுத்தவில்லை.

இருப்பினும் ஈரான் போரால் எரிபொருள் விலை சற்று அதிகரித்துள்ளது. இதனால் தினசரி செலவுகள் கூடியுள்ளன.

இதனால் அரசாங்கம் உதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கருத்துகள் எழுந்துள்ளன.

அதற்கு ஏற்றவாறு வியாழக்கிழமை (ஏப்ரல் 2) பிரதமர் லாரன்ஸ் வோங், வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சில உதவித் திட்டங்கள் திட்டமிட்டதைவிட முன்கூட்டியே நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

உதவித் திட்டங்கள் முன்கூட்டியே கிடைப்பதால் சிங்கப்பூர் குடும்பங்களின் செலவுச் சுமைகள் குறையலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அதேபோல் அரசாங்கம், ஈரான் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகங்களுக்கு உதவித் திட்டங்களை அறிவிக்கவுள்ளதாகப் பிரதமர் வோங் தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் உதவித்திட்டங்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாகச் சிங்கப்பூரில் தினசரி செலவுகள் கூடியுள்ளதாகப் பள்ளி வாகன ஓட்டுநர் பரத் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

“முதலில் மின்சாரக் கட்டணம் உயர்ந்தது, பின்னர் சமையல் எரிவாயு கட்டணம் கூடியது. இதனால் உணவு நிலையங்களில் உணவின் விலை அதிகரித்தது. பெட்ரோல் விலை கூடியதால் டாக்சிகளுக்கான கட்டணமும் உயர்ந்தது,” என்று பரத் கூறினார்.

“மாதாமாதம் 1,600 வெள்ளிக்கு டீசல் வாங்குவேன். இப்போது அது 2,000 வெள்ளிக்கு மேல் கூடியுள்ளது. மேலும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வாங்க முடியாது,” என்றார் அவர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கட்டுமானம், போக்குவரத்து, விநியோகச் சங்கிலி ஆகிய வர்த்தகங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

விமானங்களுக்கான எரிபொருள் விலையும் கூடியுள்ளதால் விமானப் பயணச்சீட்டுகளுக்கான விலையையும் நிறுவனங்கள் கூட்டியுள்ளன.

பெரிய வர்த்தகங்கள் விலை ஏற்ற நிலைமையைச் சமாளிக்கலாம்; ஆனால் சிறிய வர்த்தகங்கள் விலைகளைக் கூட்டத் தொடங்கியுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பரத்தைப் போலவே மேத்யூ ஃபூ, கென்னி டான் உள்ளிட்டவர்களும் விலை ஏற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சரக்குகளை ஏற்றிவரும் எரிபொருள் செலவு கூடியுள்ளதால் அது பல்வேறு பொருள்களின் விலைகளைக் கூட்டியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
விலைவாசிஎரிபொருள்போர்