சிங்கப்பூரில் தொடர்ந்து குறைந்துவரும் ஊழல் புகார்கள்

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அறிக்கை

சிங்கப்பூரில் தொடர்ந்து குறைந்துவரும் ஊழல் புகார்கள்

3 mins read
2a9ade56-0514-43dc-8bf3-47757633bd11
பதிவான லஞ்ச ஊழல் புகார்களில் பெரும்பாலானவை கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, கிடங்குவசதி ஆகிய துறைகளைச் சேர்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2025ஆம் ஆண்டில் ஆகக் குறைவான லஞ்ச ஊழல் புகார்கள் பதிவாயின.

அவ்வாண்டில் மொத்தம் 160 லஞ்ச ஊழல் புகார்கள் பதிவாயின. இவ்வெண்ணிக்கை 2024ல் பதிவான 177 புகார்களைக் காட்டிலும் 10 விழுக்காடு குறைவு. 2021ல் இந்த எண்ணிக்கை 249ஆக இருந்தது.

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

‘டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு 2025ஆம் ஆண்டு வெளியிட்ட ஊழல் குறியீட்டெண் பட்டியலில் இடம்பெற்றுள்ள 182 நாடுகளில் ஆகக் குறைவாக ஊழல் உள்ள மூன்றாவது நாடாகச் சிங்கப்பூர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், ஆசிய பசிபிக் வட்டாரத்தில் ஊழல் குறைந்த நாடு எனும் பெருமையைச் சிங்கப்பூர் பெற்றுள்ளது.

பதிவான புகார்களில் பெரும்பாலானவை கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, கிடங்குவசதி துறைகளைச் சேர்ந்தவையாகும். இப்போக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிலவுகிறது என லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டது.

சென்ற ஆண்டு பதிவானவற்றில் 68 புகார்கள் வழக்குகளாக மாற்றம் கண்டு விசாரிக்கப்பட்டன. கிடைக்கப்பெறும் புகார்களின் தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக இருக்கும்பட்சத்தில், அவை வழக்குகளாக மாறுமென அப்பிரிவு விளக்கியது.

விசாரிக்கப்பட்ட 68 வழக்குகளில் 16 புகார்கள் பெயர் குறிப்பிட விரும்பாதவர்களால் பதிவாகின. 

அப்பிரிவு விசாரித்த 91% வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். எஞ்சிய வழக்குகள் மீட்டுக்கொள்ளப்பட்டன.

அவ்வழக்குகளுள் ஒன்றில், தி எசிபிலநாட் கோ லிமிடெட் (TECL), ஆர்ட்ஸ் ஹாவுஸ் லிமிடெட் நிறுவனங்களின் முன்னாள் ஊழியர் சபருல்லா அப்துல் கானிமீது சென்ற ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.  

இரண்டு வடிவமைப்பு, கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்த மூன்று இயக்குநர்களிடமிருந்து 2005லிருந்து 2022 வரை அவர் 96,000 வெள்ளிக்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாகவும், பல்வேறு வேலைகளுக்கு அவ்விரு நிறுவனங்களே குறைவான கட்டணத்தைக் கேட்டதாக போலிக் கணக்குகள் காட்டியதாகவும் அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 

அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  

மற்றொரு வழக்கில், தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்தில் கைதாகி, அனுமதியில்லா இடங்களில் புகைபிடித்தல், போக்குவரத்து விபத்தொன்றில் தொடர்பு போன்ற குற்றங்களிலிருந்து தப்பிக்க முயன்ற சீன ஆடவர் ஐவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 

கைதான பின்னர், பிணையில் வெளிவந்து மேலும் சில குற்றச் செயல்களில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டது கண்டறியப்பட்டதால், அவர்களுக்குப் பிணையில்லாச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறப்பான நிலை: பொதுமக்கள் கருத்து

சென்ற ஆண்டு லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு நடத்திய பொதுக் கருத்தாய்வில் 98% மக்கள் சிங்கப்பூரின் ஊழலற்ற நிலவரம் சிறப்பாக உள்ளதென மதிப்பிட்டுள்ளனர். 2024ல் 80%க்கும் மேலாக இருந்த இவ்விகிதம் 2025ல் பெரிதும் உயர்ந்தது. 

அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சியால் குற்றங்களின் தன்மைகள் மாறிவரும் நிலையில், அவற்றைக் கையாள லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தொடர்ந்து உழைத்து வருகிறதென அப்பிரிவு தெரிவித்தது. 

எதிர்காலத்தில், எல்லை தாண்டிய ஊழல் குற்றங்களையும் கையாள முயலுமென அது கூறியது.

விழிப்புணர்வுமிகு சமூகத்துடன் தனது முயற்சிகள் இணையும்போது, தொடர்ந்து சிங்கப்பூரில் ஊழல் விகிதத்தைக் குறைவாக வைத்திருக்க முடியுமென அப்பிரிவு நம்புகிறது.

குறிப்புச் சொற்கள்