விபத்தில் கட்டுமான ஊழியர் மரணம்

விபத்தில் கட்டுமான ஊழியர் மரணம்

1 mins read
7baf95bc-5c65-49e0-96aa-90cad8c6f8fe
ஜாலான் உசாகாவில் உள்ள ஒரு வீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மேற்கூரைமீது வைக்கப்பட்ட செங்கற்கள் ஊழியர்மீது விழுந்தன. - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

அப்பர் பாய லேபார் அருகே உள்ள வீட்டில் நிகழ்ந்த விபத்தில் மேற்பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

மே 16ஆம் தேதி அந்த வீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட மேற்கூரை சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார்.

ஜாலான் உசாகாவில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அதே நாள் காலை 10.30 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன. அங்கு சென்றபோது 30 வயதில் இருந்த ஊழியர் ஒருவர் சுயநினைவு இல்லாமல் இருந்தார். அவர், உடனடியாக டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று காவல்துறை கூறியது. விசாரணை தொடர்வதாகவும் அது சொன்னது.

சம்பவம் பற்றி கேட்டதற்கு மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர், புதிதாக கட்டப்பட்ட மேற்கூரை உடைந்து 30 வயது மேற்பார்வையாளர்மீது செங்கற்கள் விழுந்ததாகக் கூறினார்.

கட்டுமானப் பொருள்களின் எடையைத் தாங்கும் வகையில் கட்டப்படாத தாங்கிகள்மீது அவற்றை வைக்கக்கூடாது என்பது ஒரு பொதுவான பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்பதை அந்தப் பேச்சாளர் நினைவூட்டினார்.

எல்சிஎன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் அவரை வேலைக்கு அமர்த்தியிருந்தது. சம்பவத்திற்குப் பிறகு அனைத்து வேலைகளையும் நிறுத்த அது உத்தரவிட்டது.

இச்சம்பவத்தை மனிதவள அமைச்சும் விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துகட்டுமானம்வெளிநாட்டு ஊழியர்மரணம்