பொங்கோலில் அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பு: உருவாக்க குழு நியமனம்

2 mins read
06919dd0-2688-45d1-beeb-35abb491a800
பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பு அமையவுள்ளது. - படம்: சாவ்பாவ்
multi-img1 of 2

சிங்கப்பூரில் முதன்முறையாக வட்டார அளவில் அமையவுள்ள அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பை உருவாக்க நிறுவனங்களைக் கொண்ட குழு ஒன்றை ஜேடிசி கார்ப்பரே‌ஷன் (JTC Corporation) அமைப்பு நியமித்துள்ளது.

உள்ளூர் மின்சார நிறுவனமான பசிபிக்லைட் பவர் (PacificLight Power), உலகளவில் எரிசக்திப் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும், சிங்கப்பூரில் இயங்கும் யுனிவர்ஸ் (Univers) என்ற மென்பொருள் நிறுவனம் ஆகியவை அக்குழுவில் இடம்பெற்றுள்ளன. பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் புதிய அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பு 2026ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும்.

புதிய அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பு, எரிசக்தியை மேலும் ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த வகைசெய்வது, நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைக் கொண்ட எரிசக்தி முறைகளை உள்ளடக்குவது போன்ற வழி[Ϟ]களின் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கையாள சிங்கப்பூருக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பு, மின்னிலக்கத் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டு எரிசக்திப் பயன்பாட்டில் உள்ள மாற்றங்களை அடையாளம் கண்டு தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ள உதவும் நவீன மின்சார விநியோக முறையாகும். கூரைமேல் உள்ள சூரியசக்தித் தகடுகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தைப் பயன்பாட்டுக்காக உள்ளடக்குவது போன்ற செயல்களையும் அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பு மேற்கொள்ளும்.

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் எரிசக்தியை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்த வகைசெய்ய புதிய அறிவார்ந்த மின்சாரக் கட்டமைப்பு, சூரியசக்தித் தகடுகள் உள்ள பெஸ் (Bess) எனும் மின்கலன் எரிசக்திச் சேகரிப்பு முறையைக் கொண்டிருக்கும்.

ஜேடிசியின் புதிய குடியிருப்பு வட்டாரங்கள் சார்ந்த விவகாரங்களுக்கான குழுமத்தின் இயக்குநரான நெல்சன் லியூ, 1,000க்கும் அதிகமான சூரியசக்தித் தகடுகள் பொருத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார். அவை ஆண்டுக்கு 3,000 மெகாவாட்-அவர் அளவிலான சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தியை உற்பத்தி செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அந்த அளவு மின்சாரம், ஓர் ஆண்டுக்கு 680 நான்கரை வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்குப் போதுமானது.

குறிப்புச் சொற்கள்