நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பு வகித்த வழக்கறிஞர் ராஜ் ஜேஷுவா தாமஸ், மனநல மருத்துவர் சையது ஹருன் அல்ஹப்ஷி இருவரும் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பித்தனர்.
அதனையடுத்து திரு தாமஸ், டாக்டர் சையது ஹருன் இருவரும் இவ்வாண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டு வருகிறது.
தங்களின் தவணைக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே இருவரும் பதவி விலகினர். அச்செயல், பாரபட்சம் இல்லாமல் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ள நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முறை மீதான கண்ணோட்டத்தில் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுக்கக்கூடும் என்ற கவலை முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பிர்கள் சிலரிடையே எழுந்துள்ளது.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முறை தொடங்கியதிலிருந்து அப்பொறுப்பை வகிப்போர் தவணைக் காலம் நிறைவடைவதற்கு முன்பே பதவி விலகியிருப்பது இதுவே முதல்முறையாகும். அவர்களின் தவணைக் காலம் ஈரரை ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
விரைவில் தாங்கள் கட்சி சார்ந்த அரசியலில் ஈடுபடப்போவதை திரு தாமஸ், டாக்டர் சையது ஹருன் இருவரும் தங்களின் பதவி விலகல் கடிதங்களில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவர்கள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எல்லா குடிமக்களுக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் சட்ட ஆசிரியரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான யூஜீன் டான்.
“அவர்கள் பதவி விலகிய நேரம், சூழ்நிலை ஆகியவற்றின் தொடர்பில்தான் அக்கறை எழுந்துள்ளது,” என்று துணை பேராசிரியர் டான் கூறினார். நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்தபோது அரசியல் ரீதியான தொடர்பு ஏற்பட்டது சரிதானா என்பதன் தொடர்பிலான கேள்விகள் தலைதூக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான அந்தியா ஓங், நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் இருந்தாலும் பாரபட்சமின்றி செயல்படும் நோக்குடன் நடப்பில் இருக்கும் அம்முறையில் பாதிப்பு ஏற்படலாம் என்று கவலை தெரிவித்துள்ளார். நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முறை, ஏற்கெனவே ஓரளவு விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பதவி விலகி அதன் பிறகு தேர்தலில் போட்டியிடவிருப்பவர்கள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அது பிரச்சினையாக இருக்கும் என்று ஊழியரணி தொடர்பான பொருளியல் வல்லுநரும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான வால்டர் தெசெய்ரா சுட்டினார்.

