புனித ‘லைலத்துல் கத்ர்’ இரவு: இறையில்லங்களில் ஒன்றுகூடும் சமூகம்

அருள் பெற்று அன்பு தரும் நல்தருணம்

புனித ‘லைலத்துல் கத்ர்’ இரவு: இறையில்லங்களில் ஒன்றுகூடும் சமூகம்

2 mins read
ff56fe71-9c48-4e18-b747-9f9c29ff87ce
அல் அமீன் பள்ளிவாசலில் திங்கட்கிழமை (மார்ச் 16) சிறப்புத் தொழுகை - படம்: சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
Google News Preferred Icon

ரமலான் மாதத்தின் இறுதிப் பத்து நாள்களில் வரும் சிறப்பு வாய்ந்த ‘லைலத்துல் கத்ர்’ இரவை முன்னிட்டு, சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் (எஸ்கேஎம்எல்) அல்-அமீன் பள்ளிவாசலுடன் இணைந்து மாபெரும் சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

நபிகள் நாயகத்திற்குத் திருக்குர்ஆன் அருளப்பட்ட இரவு, பாதுகாப்பு வழங்கும் இரவு, தீமையிலிருந்து பாதுகாவல் கிடைக்கும் இரவு எனப் பலவாறு புகழப்படும் இரவாக ‘லைலத்துல் கத்ர்’ முஸ்லிம் அன்பர்களிடையே போற்றப்படுகிறது.

ரமலானின் இறுதி 10 நாள்களான  ‘தவ்பாவுடைய பத்து’ காலகட்டத்தில் ஒற்றைப் படை இரவுகள் சிறப்புடையதாகும் எனக் கூறப்படுகிறது.

திங்கட்கிழமை (மார்ச் 16) இரவு நேரத்தில் தொடங்கும் இதற்கான நிகழ்ச்சியில் 1,000க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இந்த இரவின் மாண்பு குறித்து எஸ்கேஎம்எல் அமைப்பின் போதகரும் சமய அறிஞருமான உஸ்தாத் மில்லத் இஸ்மாயில் விளக்கமளித்தார்.

இறைத்தொழுகையில் ஈடுபடும் பெண்கள்
இறைத்தொழுகையில் ஈடுபடும் பெண்கள் - படம் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

“1,000 மாதங்களைவிடச் சிறந்த இரவு எனப் புனித குர்ஆன் குறிப்பிடுகிறது. இந்த ஓர் இரவில் அவர்கள் இறைவனை வணங்கினால், ஆயிரம் மாதங்கள் வணங்கியதற்கான மிகச்சிறந்த நற்கூலி இறைவனிடமிருந்து கிடைக்கும்,” என்று அவர் கூறினார்.

இஸ்லாத்தின் போதனையின்படி, வானவர்கள் கூடி இந்த இரவிலே பூமியில் இறங்கி, மக்களெல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று இறைவனுக்குப் பதில் கொடுப்பார்கள் என்றார் திரு இஸ்மாயில்.

மக்கள் அனைவரும் தீமையை விட்டு விலகி, ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொண்டு இறைவனின் அன்பால் சரணடைந்திருக்கிறார்கள் என்ற செய்தியை வானவர்கள் இறைவனிடம் காலை நேரத்தில் சமர்ப்பிக்கும்போது, இறைவன் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார் என்றும் அவர் கூறினார்.

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் லைலத்துல் கத்ர் சிறப்பு தொழுகை
அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் லைலத்துல் கத்ர் சிறப்பு தொழுகை - படம்: அப்துல் கஃபூர் பள்ளிவாசல்

சிங்கப்பூரிலுள்ள பள்ளிவாசல்களில் இந்த இரவுக்கென சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அல்-அமீன் பள்ளிவாசலில் 1,000 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில், மக்களின் வசதிக்காகவும் உற்சாகத்திற்காகவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவர் நசீர் கனி தெரிவித்தார்.

“தேநீர், கறிபஃப் போன்ற சிற்றுண்டிகளையும் நாங்கள் வழங்கி, வருகின்றவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டித் தொடர்ந்து அவர்கள் இந்த இரவைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதற்காக இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறோம்,” என்று திரு நசீர் கூறினார்.

அல்-அமீன் பள்ளிவாசலில் திங்கட்கிழமை (மார்ச் 16) சிறப்புத் தொழுகை
அல்-அமீன் பள்ளிவாசலில் திங்கட்கிழமை (மார்ச் 16) சிறப்புத் தொழுகை - படம் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
அல்-அமீன் பள்ளிவாசலில் இறையன்பர்கள்.
அல்-அமீன் பள்ளிவாசலில் இறையன்பர்கள். - படம் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்

சிறப்பு இரவுத் தொழுகைகள், உஸ்தாத் மில்லத் இஸ்மாயிலின் உரை, திக்ரு மஜ்லிஸ்கள் என இந்த இரவு முழுவதும் ஆன்மிக அங்கங்கள் நடந்தேறும்.

விடியற்காலை வரை விழித்திருந்து வழிபடும் மக்களுக்கு நோன்பைத் தொடங்குவதற்கு முன், அதிகாலையில் சாப்பிடக்கூடிய சஹர் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

வந்திருக்கும் அன்பர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் சமூகமாக ஒன்றுகூடி மகிழும் சிறப்பான சமூக நிகழ்ச்சியாகவும் இது திகழ்வதாகத் திரு நசீர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்