பெண்களின் ஆடைகளைத் திருடியதாகச் சீன நாட்டவர் மீது குற்றச்சாட்டு

பெண்களின் ஆடைகளைத் திருடியதாகச் சீன நாட்டவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
7802d7ee-1b3f-43a4-9538-ec39b64e55de
லி ஜுவைக் கைதுசெய்தபோது அவருக்குச் சொந்தமில்லாத சில பொருள்களையும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை
Google News Preferred Icon

பெண்களின் உள்ளாடைகள், காலணிகள் ஆகியவற்றை திருடியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவரான லி ஜு, வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

அவர்மீது ஐந்து திருட்டுக் குற்றச்சாட்டுகளும் மோசடியான முறையில் மற்றவர்களின் பொருள்களை வைத்திருந்ததற்காக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டன. பிடாடாரி பார்க் டிரைவ் பகுதியில், $180க்கும் அதிக மதிப்புள்ள பெண்களின் உள்ளாடைகள், இரவு நேர ஆடைகள் ஆகியவை அடங்கிய பொட்டலத்தை லி மார்ச் 16ஆம் தேதி திருடியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மார்ச் 17ஆம் தேதி, அதே பகுதியில் கிட்டத்தட்ட $3 மதிப்புள்ள கைப்பேசி உறை இருந்த மற்றொரு பொட்டலத்தையும் அவர் களவாடியதாகக் கூறப்பட்டது.

மவுண்ட் வெர்னான் சாலையில் கிட்டத்தட்ட $15 மதிப்புள்ள ஒரு ஜோடி தோல் செருப்புகளை மார்ச் 14ஆம் தேதி திருடியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி சிராங்கூன் பகுதியில் உள்ள சலவையகம் ஒன்றில் துணி உலர்த்தும் இயந்திரத்திலிருந்த கிட்டத்தட்ட $300 மதிப்புள்ள மூன்று சட்டைகளையும் மூன்று கால் சட்டைகளையும் லி திருடியதாகச் சொல்லப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதிக்கும் மார்ச் 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு இடங்களில் ஐந்து திருட்டுச் சம்பவங்கள் நடந்ததாகக் காவல்துறைக்கு மார்ச் 19ஆம் தேதி தகவல் கிடைத்தது.

ஆடைகள், காலணிகள், விநியோகம் செய்யப்பட்ட பொட்டலங்கள் ஆகியவை திருடப்பட்டதாகப் புகார்கள் பதிவாகின.

விசாரணை நடத்திய அங் மோ கியோ காவல்துறை பிரிவு அதிகாரிகள் கண்காணிப்புக் கருவி உதவியுடன் லியை அடையாளம் கண்டு, மார்ச் 18ஆம் தேதி அவரைக் கைதுசெய்தனர்.

அப்போது அவருக்குச் சொந்தமில்லாத சில பொருள்களையும் ஆடைகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

குறிப்புச் சொற்கள்