மீள்திறன்மிக்க உலக ஒழுங்கை வடிவமைப்பதில் சீனாவிற்கு முக்கியப் பங்கு: பிரதமர் வோங்

மீள்திறன்மிக்க உலக ஒழுங்கை வடிவமைப்பதில் சீனாவிற்கு முக்கியப் பங்கு: பிரதமர் வோங்

2 mins read
3b6f66d5-7e7b-482d-920a-3172ec3f52c4
சீனாவின் ஹைனான் மாநிலத்தில் நடைபெறும் போஆ மாநாட்டில் வியாழக்கிழமை (மார்ச் 26) உரையாற்றிய பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

உலக நாடுகள் ஒத்துழைப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிய வேண்டிய இக்காலகட்டத்தில், சீனாவின் வளர்ந்து வரும் பொருளியல் பலம், செயல்திறன் காரணமாக, ஒரு மீள்திறன்மிக்க உலகளாவிய ஒழுங்கை வடிவமைப்பதில் அந்நாடு முக்கியப் பங்கு வகிக்கும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, ‘வணிகத் தடம்’ போன்ற திட்டங்கள் மூலம் சீனா ஏற்கெனவே உலகளாவிய வளர்ச்சிக்குப் பங்களித்து வருகிறது.

மேலும், செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் துறைகளில் புதிய விதிகளை வகுக்கவும் சீனா உதவி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் ஹைனான் மாநிலத்தில் நடைபெற்று வரும் போஆ மாநாட்டில் வியாழக்கிழமை (மார்ச் 26) உரையாற்றிய பிரதமர் வோங், அனைத்துலக அமைப்பின் தூண்களாக விளங்கும் நிறுவனங்களும் நெறிமுறைகளும் கவலையளிக்கும் வகையில் சிதைந்து வருவதாகக் கூறினார்.

“அனைத்துலக விதிகளுக்குக் கட்டுப்படுவதை நாடுகள் குறைத்துக்கொண்டு, தங்களுக்கு அதிகாரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னிச்சையாகச் செயல்படும் போக்கு அதிகரித்து வருகிறது. விதிகளைவிட வெறும் அதிகாரமே மேலோங்கும்போது உலக ஒழுங்கு சீர்குலையும். அப்போது பெரிய நாடோ சிறிய நாடோ, எதுவுமே உண்மையான பாதுகாப்பைப் பெற முடியாது,” என்றார் அவர்.

தற்போதைய புவிசார் அரசியல் மாற்றங்கள் உலகப் பொருளியலையே மாற்றியமைப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் வோங், நாடுகள் இப்போது பாதுகாப்புக்கும் மீள்திறனுக்குமே அதிக முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறினார்.

மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உலகப் பொருளியல்களுடன் தங்களை எவ்வாறு இணைத்துக்கொள்வது என்பதை நாடுகள் மறுசீரமைப்பு செய்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழலில், வழக்கமான பலதரப்பு உடன்பாடுகளை எட்டுவது கடினம் என்றும் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட மேலும் நீக்குப்போக்கான வழிகள் தேவை என்றும் அவர் கூறினார்.

“ஒரே மாதிரியான சிந்தனை கொண்ட நாடுகள் இணைந்து ஏற்பாடுகளைச் செய்துகொள்வது ஒரு நடைமுறை சார்ந்த வழியாகும். இவை புதிய கருத்துகளைச் சோதிக்கவும் தரநிலைகளை வகுக்கவும் விரைவான முடிவுகளை வழங்கவும் உதவும்,” என்று பிரதமர் வோங் சொன்னார்.

சீனாவின் வளர்ந்து வரும் ஆற்றல், உலகளாவிய வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றும் என்று அவர் கூறினார். சீனா தனது வளர்ச்சி உத்தியின் மையமாக அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்தைக் கொண்டுள்ளதுடன் மின்னிலக்க, பசுமைத் தொழில்நுட்பங்களில் ஏற்கெனவே முன்னணியில் இருப்பதையும் அவர் சுட்டினார்.

“தொழில்நுட்ப மாற்றத்தின் அடுத்த அலையில் சீனா வெறும் பங்கேற்பாளராக இருக்கப்போவதில்லை; அதனை வடிவமைத்து வழிநடத்தும் தகுதியையும் சீனா கொண்டுள்ளது,” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்சீனாஉலகம்