துன்புறுத்தல் சம்பவம்: குழந்தைப் பராமரிப்பு நிலைய முதல்வருக்குச் சிறை

துன்புறுத்தல் சம்பவம்: குழந்தைப் பராமரிப்பு நிலைய முதல்வருக்குச் சிறை

2 mins read
a74a085d-03ab-4be1-aed9-081c8ea0a562
சிறுவனைக் கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக $8,000 வரை அபராதம், எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

ஒரே நிகழ்வில் நான்கு வயதுச் சிறுவனைப் பலமுறை துன்புறுத்திய குழந்தைப் பராமரிப்பு நிலைய முதல்வருக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 23) 10 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக அந்த 40 வயதுப் பெண்ணின் பெயரை வெளியிட முடியாது.

சிறுவனைக் கொடுமைப்படுத்தியதாகத் தம் மீதான குற்றச்சாட்டை அப்பெண் ஒப்புக்கொண்டார்.

நீதிமன்ற ஆவணங்களில் குழந்தைப் பராமரிப்பு நிலையத்தின் பெயரும் வெளியிடப்படவில்லை.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் தேதியன்று பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை அவனைக் குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அந்த நாளில் மாணவர்கள் தங்களது பட்டமளிப்பு விழாவுக்காகத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சிறுவன் மற்றும் சில மாணவர்கள் மேசையருகில் அமர்ந்து பொம்மைகளுடன் விளையாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த அலமாரிகளுக்கு மிக அருகில் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்தான். ஒரு கட்டத்தில் எழுந்து நிற்காமலேயே பொம்மைப் பெட்டி ஒன்றை இழுக்க முயன்றான்.

அந்தப் பெட்டியை எடுக்க எழுந்து நிற்குமாறு ஆசிரியை ஒருவர் அவனிடம் கூறினார். ஆனால், அவன் மறுத்துவிட்டான்.

அதைப் பார்த்த நிலையத்தின் முதல்வர், சிறுவனிடம் சென்று அவனது தலையில் அடித்தார். பின்னர், அவனது இடது கையைப் பிடித்து அவனை மேலே இழுக்க முயன்றார். ஆனால், சிறுவன் நகர மறுத்துவிட்டான்.

சிறுவன் சிறுநீர் கழித்திருப்பதை அவர் கவனித்தபோது, அவர் மேலும் கோபமடைந்து, அவனது கையை மீண்டும் பிடித்துப் பலமுறை இழுத்தார்.

சிறுவன் எழுந்து நின்றதும், அவர் அவனது தலையில் மீண்டும் ஒருமுறை அடித்தார். பின்னர், அந்த முதல்வர் பொம்மைப் பெட்டியின் பிளாஸ்டிக் மூடியை எடுத்து, கடைசியாக ஒருமுறை சிறுவனின் தலையில் அடித்தார். இறுதியாக, அவனது தலையைத் தள்ளிவிட்டார்.

அந்தத் துன்புறுத்தல் செயல்கள் நான்கு நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தன என்றும் அவை நிலையத்தின் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளன என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமது மகனின் காயங்கள் சற்று மோசமாக இருப்பதைக் கவனித்த சிறுவனின் தந்தை, அவனை கேகே மகளிர், குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

சிறுவனுக்கு ஏற்பட்ட காயம் தற்செயலானது அல்ல என்பதை அங்குள்ள மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

ஒரு குழந்தையைக் கொடுமைப்படுத்தும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், $8,000 வரை அபராதம், எட்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்