1,600 அடுக்குமாடி வீட்டு கார் நிறுத்தும் இடங்களில் மின்னூட்ட வசதிகள்

1,600 அடுக்குமாடி வீட்டு கார் நிறுத்தும் இடங்களில் மின்னூட்ட வசதிகள்

2 mins read
d10a4058-472f-495c-87f7-11a88dda6b14
இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 150 கார் நிறுத்துமிடங்களில் மின்னூட்ட வசதிகளை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் உள்ள கார் நிறுத்துமிடங்களில் கிட்டத்தட்ட 85 விழுக்காடு அதாவது 2,000 கார் நிறுத்துமிடங்களில் 1,600க்கும் அதிகமான இடங்களில் மின்சாரக் கார்களுக்கு மின்னூட்டம் செய்வதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 150 கார் நிறுத்துமிடங்களில் அத்தகைய வசதிகளை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும், தொழில்நுட்பத் தட்டுப்பாடுகள் காரணமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் எஞ்சிய சுமார் 150 கார் நிறுத்துமிடங்களில் மின்னூட்ட வசதிகள் பொருத்தப்படும்.

வெவ்வேறு பயனீட்டாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மின்னூட்ட வசதிகளைப் பொருத்தும் பணிகள் தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

அதுவரை 7.4 கிலோவோட் அளவுள்ள மின்னூட்ட மையங்களை கார் நிறுத்துமிடங்களில் அமைக்க நிலப் போக்குவரத்து ஆணையம் முடிவெடுத்துள்ளது. அத்தகைய மின்னூட்ட வசதிகள் மெதுவாகச் செயல்பட்டாலும் இரவு முழுவதும் காரை மின்னூட்டம் செய்துகொள்ள வசதியாக இருக்கும் என்று ஆணையம் சொன்னது.

ஃபேர்ன்வேல் சாலை, அங் மோ கியோ ஸ்திரீட் 22, யூனோஸ் கிரசெண்ட் ஆகிய பகுதிகளில் அந்த மின்னூட்ட வசதிகள் அமைக்கப்படும்.

கார் மின்னூட்ட வசதிகள் இல்லாத தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளில் (பிடிஓ) தெங்கா, பிடாடாரி, தெம்பனிஸ் வெஸ்ட் ஆகியவை அடங்கும்.

தெம்பனிஸ் வட்டாரத்தில் உள்ள குடியிருப்பாளர்களில் சிலர் மின்னூட்ட வசதியால் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இம்மாதம் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குத் தற்காலிகப் போக்குவரத்து அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், மின்னூட்டத் தொழில்நுட்பத்தைப் பொருத்தும் பணிகளை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொள்வர் என்று எழுத்துபூர்மாகப் பதிலளித்தார்.

மின்னூட்ட வசதிக்கு தேவை அதிகம் உள்ள கார் நிறுத்துமிடங்களில் அத்தகைய வசதிகளைக் கூடுதலாகப் பொருத்த சமூகத்துடனும் மின்னூட்ட வசதிகளை அமைக்கும் நிறுவனங்களுடனும் இணைந்து செயலாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.

கார் நிறுத்துமிடங்களில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான மின்னூட்ட வசதிகள் மெதுவாகவும் இரவு முழுவதும் பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளன.

குறிப்புச் சொற்கள்