மன உளைச்சலால் தவிக்கும் பணிப்பெண்களுக்கு உதவுகிறது ‘கேர் சிஸ்டர்ஸ்’

மன உளைச்சலால் தவிக்கும் பணிப்பெண்களுக்கு உதவுகிறது ‘கேர் சிஸ்டர்ஸ்’

3 mins read
642b4e59-c8ab-4e06-920a-b7ede978d14f
மே 3ஆம் தேதி ‘கேர் சிஸ்டர்ஸ்’ உறுப்பினர்களான கேத்தரின் கோன்ஸாகா சுவாரஸ் (இடம்), எனி விஜயாந்தி (இடமிருந்து 2வது) ஆகியோர் பணிப்பெண்களைச் சந்தித்துப் பேசினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

முதலாளியால் தாக்கப்பட்டு உடலில் காயங்கள் ஏற்பட்ட போதிலும் பயம் காரணமாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கத் துணியாத வெளிநாட்டுப் பணிப்பெண் ஒருவர், பிலிப்பீன்சைச் சேர்ந்த சகதோழியிடம் மட்டுமே தமது குமுறலைக் கொட்டி அழுதுள்ளார்.

அவரைப் புகார் செய்யவைக்க கேத்தரின் கோன்ஸாகா சுவாரஸ் என்ற சக ஊழியரால் முடியாமல் போனாலும், அவர் தாயகம் திரும்பும் வரை இரண்டு வாரங்களாக அவரது மனநிலையைத் தொடர்ந்து கண்காணித்து ஆறுதலாக இருந்துள்ளார்.

வெளிநாட்டுப் பணிப்பெண்களின் மனநல மேம்பாட்டிற்காகத் தொண்டூழியம் செய்துவரும் ‘கேர் சிஸ்டர்ஸ்’ என்ற ஆதரவுக் குழுவில் இணைந்து பணியாற்றியபோதுதான் கேத்தரினுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.

2022ல் வெறும் 180 பேருடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பில் தற்போது கிட்டத்தட்ட 1,000 பணிப்பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மனிதவள அமைச்சு, ‘அலையன்ஸ் ஆஃப் டொமெஸ்ட்டிக் எம்ப்ளாயீஸ் அவுட்ரீச்’ எனற அமைப்புடன் இணைந்து இந்தத் திட்டத்தை நடத்தி வருகிறது.

‘மனநலப் பிரச்சினை’ என்று வெளியில் தெரிந்தால் வேலை பறிபோய்விடுமோ என்ற பயமே பலரை அதிகாரபூர்வமாக உதவி தேடுவதில் இருந்து தடுக்கிறது.

இது குறித்துப் பேசிய 42 வயது கேத்தரின், “எங்களைப் போன்ற சக தோழிகளிடம் எவ்விதத் தயக்கமும் இன்றி தங்களின் மனக் குமுறல்களைக் கொட்டுகிறார்கள். தோழிக்குத் தோழியாக நாங்கள் பழகுவதே இதற்கு முக்கியக் காரணம்,” என்றார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டுப் பணிப்பெண்களின் எண்ணிக்கை 2020ல் 247,400ஆக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் அது 28 விழுக்காடு அதிகரித்து 6 ஆண்டுகளில் இல்லாத அளவாக 316,900ஐ எட்டியுள்ளது. இத்தகைய சூழலில், இந்த ஆதரவுக் குழுவின் தேவை மேலும் அதிகரித்துள்ளது.

என்டியுசியின் பணிப்பெண்களுக்கான நிலையம், கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுதோறும் சுமார் 3,000 பணிப்பெண்களை, 24 மணி நேர உதவித் தொலைபேசி, நிகழ்ச்சிகள் மூலம் அணுகியுள்ளது.

“இவ்வளவு விளம்பரங்களும் விழிப்புணர்வுகளும் செய்யப்பட்ட பிறகும் பணிப்பெண்கள் தங்களின் பிரச்சினைகளுடன் முன்னால்வர இன்னும் தயங்குகிறார்கள்,” என்றார் அந்த அமைப்பின் இயக்குநர் மைக்கல் லிம்.

இதற்குக் காரணம், மனநலப் பிரச்சினை என்று தெரிந்தால் முதலாளி தங்களை வேலையிலிருந்து நீக்கிவிடுவார் என்ற பயம்தான் என்று ஏடியோ அமைப்பின் குழுத் தலைவர் ஜாய்டர் இங் சுட்டிக்காட்டினார். பிப்ரவரி மாதம் மனநலக் கழகம் வெளியிட்ட ஆய்விலும் இதுவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

“பணிப்பெண்கள் அதிகாரபூர்வ அமைப்புகளைவிட, தங்களுக்குத் தெரிந்த சக ஊழியர் குழுக்கள் மூலமாகவே உதவிகளைப் பெற விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்தே ‘கேர் சிஸ்டர்ஸ்’ திட்டம் தொடங்கப்பட்டது,” என்று மனிதவள அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

பிலிப்பீன்ஸ், இந்தோனீசியா, மியன்மார், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணிப்பெண்கள் அடங்கிய இக்குழுவினர், மாதம் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் பாய லேபார், ஃபோர்ட் கேனிங் போன்ற பணிப்பெண்கள் கூடும் இடங்களுக்குச் சென்று தோழமையுடன் பழகுகின்றனர்.

“சிரித்துப் பேசினாலும் முகத்தைப் பார்த்தே அவர்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா, இல்லையா என்பதை என்னால் கண்டுபிடித்துவிட முடியும்,” என்கிறார் 2024ல் இந்த அமைப்பில் இணைந்த இந்தோனீசிய பணிப்பெண் எனி விஜயாந்தி.

மன உளைச்சலில் தவிக்கும் பணிப்பெண்களுக்கு ஆறுதலாக இருப்பதோடு, 24 மணி நேர உதவித்தொலைபேசி எண், வேலைவாய்ப்பு உரிமைகள் குறித்த விவரங்கள் அடங்கிய மனிதவள அமைச்சின் ‘வாட்ஸ்அப்’ தளத்திலும் அவர்களை இந்தத் தொண்டூழியர்கள் இணைக்கின்றனர்.

தற்போது ‘கேர் சிஸ்டர்ஸ்’ குழுவினருக்கு உளவியல் முதலுதவி, தற்கொலைத் தடுப்பு, மனநல ஆதரவு போன்ற சிறப்புப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்