அங் மோ கியோ வட்டாரத்தில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 10) நிகழ்ந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
அங் மோ கியோ அவென்யூ 1க்கும் அங் மோ கியோ அவென்யூ 8க்கும் இடைப்பட்ட சாலைச் சந்திப்பில் ஏற்பட்ட இந்தத் தீச்சம்பவம் குறித்து பிற்பகல் 2.10 மணிக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
தற்காப்புப் படை அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
பிற்பகல் 2.45 மணியளவில் ‘டவர் ட்ரான்சிட்’ பேருந்துச் சேவை நிறுவனம் தனது ஃபேஸ்புக் பதிவில், ஈசூன் போக்குவரத்து நிலையத்தை நோக்கிச் செல்லும் 853 எண் கொண்ட பேருந்து மாற்றுப் பாதையில் செல்லும் என்று தெரிவித்தது. இதனால் மூன்று பேருந்து நிறுத்தங்கள் தவிர்க்கப்படும் என்றும் அது கூறியது.
எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுகளில், பேருந்துச் சேவைகள் 22, 24, 144, 145, 159 மற்றும் 851e ஆகியவை அங் மோ கியோ அவென்யூ 1, 3 மற்றும் 8லிருந்து திருப்பிவிடப்பட்டதாகத் தெரிவித்தது. இதன் காரணமாக மொத்தம் எட்டு பேருந்து நிறுத்தங்கள் தவிர்க்கப்பட்டன.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை புள்ளிவிவரங்களின்படி, 2025ஆம் ஆண்டில் மொத்தம் 226 வாகனத் தீச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது 2024ஆம் ஆண்டில் பதிவான 257 வாகனத் தீச்சம்பவங்களைவிட குறைவு.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டில் நான்கு மின்சார வாகனத் தீவிபத்துகள் பதிவாகின. அதற்கு ஓராண்டுக்கு முன்பு ஒரே ஒரு வாகனத் தீச்சம்பவம் நிகழ்ந்தது. இந்த நான்கு விபத்துகளில் மூன்று, மின்கலனில் ஏற்பட்ட மின் கோளாறுகள் காரணமாக நிகழ்ந்தவை என்று 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் வருடாந்திரப் புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரில் கார்கள், டாக்சிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட மொத்தம் 50,025 மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தரவுகள் காட்டுகின்றன.

