காத்மாண்டு: நேப்பாளத்தில் சிறார்களும் இளையர்களும் அண்மையக் காலங்களில் புற்றுநோயால் பேரளவில் பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள சித்வான் வட்டாரத்தில் உள்ள ‘பிபி கொய்ராலா நினைவு புற்றுநோய் மருத்துவமனை’ படுக்கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன.
அந்த மருத்துவமனையில் சிறாருக்காக ஒதுக்கப்பட்ட 37 படுக்கைகளில், கிட்டத்தட்ட அனைத்தும் பெரும்பாலான நேரங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
மற்ற மருத்துவமனைகளும் புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் தீவிரக் கவனம் செலுத்திவருகின்றன.
புற்றுநோய் சிகிச்சை நாடி வரும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிப்பதாக நேப்பாளம் தெரிவித்துள்ளது.
மூத்தோர் மட்டுமல்லாமல், சிறார், குறிப்பாக 20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளையர்கள்கூட நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாக புற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
“அண்மைய ஆண்டுகளில் இளம் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது,’’ என்று கூறியுள்ள்ளார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சிவாஜி பவ்டல்.
“இருப்பினும், நாட்டில் இளையர், குழந்தைகளிடையே புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணம் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை,” என்றும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ‘‘நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. எனினும், ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துவிட்டது,’’ என்றார்.
மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய தரவுகளின்படி, 2024 முதல் 2025 நிதியாண்டில் 210,000 க்கும் மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
2023 முதல் 2024 நிதியாண்டில் காலாண்டுடன் ஒப்புநோக்க இது 52 விழுக்காடு அதிகம். அந்தக் காலக்கட்டத்தில் 138,000ஆக இருந்தது நோயாளிகளின் எண்ணிக்கை.
இது குறித்து பேசிய மருத்துவர் பவ்டெல், “2024 முதல் 2025 ஆண்டுக்கு இடைபட்ட காலத்தில் 7,000 க்கும் மேற்பட்டோர் புற்றுநோய் பாதிப்பிற்காக முதன்முறையாக சிகிச்சை பெறவந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புற்றுநோயிலிருந்து தப்பியவர்கள். எஞ்சியோர் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருபவர்கள்,” என்று விளக்கினார்.

