திடீரென மயங்கிய கிராப் ஓட்டுநர்; போக்குவரத்து விளக்குக் கம்பத்தில் மோதிய கார்

திடீரென மயங்கிய கிராப் ஓட்டுநர்; போக்குவரத்து விளக்குக் கம்பத்தில் மோதிய கார்

2 mins read
பயணிகள் யாருக்கும் காயம் இல்லை
d91515bf-67d2-409c-990e-f3d9cd41b189
கார் தஞ்சோங் ரூ சாலை, மேயர் ரோடு மற்றும் ஃபோர்ட் ரோடு சந்திப்பில் தடுமாறியது. - படம்: கூகல் மேப்ஸ்
Google News Preferred Icon

கிராப் ஓட்டுநர் இரண்டு பயணிகளுடன் சவாரி செய்து கொண்டிருந்த போது திடீரெனச் சில நொடிகள் மயங்கினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்த போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதியது.

அதிர்‌‌ஷ்டவசமாக காரில் இருந்த இரண்டு பயணிகளுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. 66 வயது ஓட்டுநர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் மார்ச் 16ஆம் தேதி காத்தோங் வட்டாரத்தில் இரவு 9.30 மணியளவில் நடந்தது.

கார் தஞ்சோங் ரூ சாலை, மேயர் ரோடு மற்றும் ஃபோர்ட் ரோடு சந்திப்பில் தடுமாறியது. பின்னர் அது போக்குவரத்து விளக்கு கம்பத்தில் மோதியது என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததுடன் உடனடியாக அங்குச் சென்றதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் காவல்துறையும் தெரிவித்தன.

கார் ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் காவல்துறையின் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து காரில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் தமது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

“காரின் பின்னிருக்கையில் நண்பருடன் அமர்ந்திருந்தேன். ஓட்டுநர் தொடர்ந்து இருமலால் அவதிப்பட்டார். சாலை சந்திப்பில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்ததுபோது வாகனத்தை ஓட்டுநர் நிறுத்தினார். அப்போது ஒட்டுநர் மூச்சுவிடத் தடுமாறினார்.

“சிவப்பு விளக்கு ஒளிர்ந்தபோது கார் திடீரெனச் சில அடிகள் முன்சென்றது. ஓட்டுநர் சுயநினைவை இழந்ததுபோல் இருந்தார். இப்போது கார் மேலும் சில அடிகள் முன்சென்றது. நண்பர் ஓட்டுநரின் முதுகில் தட்டினார். அப்போது ஓட்டுநர் விழித்துக்கொண்டார். இருப்பினும் அதிர்ச்சியில் அவர் காரின் வேகத்தைக் கூட்டியதால் கார் விபத்துக்குள்ளானது,” என்று சம்பவத்தை விவரித்தார்.

கார் ஓட்டுநருக்கு கிராப் உதவி வருவதாகத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
கிராப்விபத்துஓட்டுநர்