$35,000 மதிப்புள்ள வைர மோதிரத்தைக் கண்டெடுத்து ஒப்படைத்த பேருந்து ஓட்டுநர்

$35,000 மதிப்புள்ள வைர மோதிரத்தைக் கண்டெடுத்து ஒப்படைத்த பேருந்து ஓட்டுநர்

2 mins read
86d2fe64-c183-42c1-bbeb-314eaf615662
பேருந்தில் கண்டெடுத்த விலை உயர்ந்த வைர மோதிரத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பேருந்து ஓட்டுநர் திரு டியோ லாய் ஹுவாட்டுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெரிவித்தது. - படங்கள்: எஸ்பிஎஸ் டிரான்சிட், ஃபேஸ்புக்
Google News Preferred Icon

பேருந்தில் தவறவிடப்பட்ட ஏறத்தாழ $35,000 மதிப்புள்ள வைர மோதிரத்தைக் கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த எஸ்பிஎஸ் பேருந்து ஓட்டுநரான 54 வயது திரு டியோ லாய் ஹுவாட்டுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இம்மாதம் (மே) 11ஆம் தேதி இரவு, எஸ்பிஎஸ் பேருந்துச் சேவை 10ல் பயணம் செய்த திருவாட்டி கிளரிசா டான் என்பவர், அவருடைய வைர மோதிரத்தைத் தவறுதலாகப் பேருந்திலேயே விட்டுச் சென்றார். மறுநாள் காலை அவர் எஸ்பிஎஸ் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, ஓட்டுநர் திரு டியோ அந்த மோதிரத்தைக் கண்டெடுத்துப் பத்திரமாக அலுவலகத்தில் ஒப்படைத்த விவரம் தெரியவந்தது.

தமது பணிநேரத்தின் இறுதியில், கென்ட் ரிட்ஜ் முனையத்தில் பேருந்தின் பின்பக்கக் கதவு அருகில் வழக்கமான சோதனையை மேற்கொண்டபோது திரு டியோ மோதிரத்தைக் கண்டெடுத்துள்ளார்.

விலை உயர்ந்த பொருளை இழந்த உரிமையாளர் மிகுந்த மனக்கவலையில் இருப்பார் என்பதை உணர்ந்த அவர், உடனடியாக அதனைத் தமது மேலதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் திரு டியோவின் நேர்மையையும் நிபுணத்துவத்தன்மையையும் பாராட்டியதோடு, அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

“கடந்த 30 ஆண்டுகளாகப் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறேன். பேருந்தில் இப்படி நினைத்துப் பார்க்க முடியாத, மிக விலை உயர்ந்த பொருளைக் கண்டெடுத்திருப்பது இதுவே முதல்முறை. விலை உயர்ந்த ஒரு பொருளை ஒருவர் இழக்கும்போது அது திரும்பக் கிடைக்க வேண்டும் என்றுதான் வேண்டிக்கொள்வார்கள். அதை நினைத்து ஆழ்ந்த துயரில் ஆழந்திருப்பர். நான் என் கடமையைத்தான் செய்தேன்,” என்றும் மிகுந்த பெருந்தன்மையுடன் திரு டியோ குறிப்பிட்டுள்ளார்.

வைர மோதிரம் திரும்பக் கிடைத்ததும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டு திருவாட்டி டான், ஓட்டுநரின் இந்தச் செயல் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்துவதாகக் கூறி, கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்