கடன் அட்டைகளை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துதல், ‘முதலில் பொருள்களை வாங்குவோம்; பிறகு பணம் செலுத்துவோம்’ எனும் மனப்போக்கு, சலுகைகளுக்காகவும் பரிசுப் புள்ளிகளுக்காகவும் தொடர்ந்து செலவழிப்பது ஆகியவை ஒருவருக்கு அவரது செலவுகள் எல்லாம் கட்டுப்படியாகக்கூடியவையே என்றும் அவரால் வாங்க முடியும் என்றும் போலியான நம்பிக்கையைக் கொடுக்கக்கூடும்.
இந்தக் கருத்துடன் பொறுப்புணர்வுமிக்க நிதி மேலாண்மை, கடன்சுமைக்கு ஆளாகாமல் வளங்களை நிர்வாகம் செய்வது குறித்த வல்லுநர்களின் உரைகள், குடியிருப்புப் பேட்டைகளில் நீதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘ஜஸ்டிஸ் அவேர்னஸ்@ஹார்ட்லேண்ட்ஸ்’ கருத்தரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்தன.
சனிக்கிழமை (ஜனவரி 31) காலை முதல் பிற்பகல் வரை நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், ‘‘கடன் அட்டைகள் நிதிச்சுமைகளில் சிக்கவைக்கும் சூழ்ச்சியாக மாறவிடக்கூடும். அவசரத் தேவைகளுக்கு அவற்றைப் பொறுப்புடன் கவனமாகப் பயன்படுத்தினால் பாதுகாப்பாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இல்லாவிடில் அவை கடனில் மூழ்கச்செய்துவிடலாம்,’’ என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
நீதி சார்ந்த விரிவான திறவுகோலைக் குடியிருப்பாளர்களுக்கு நல்கிடவும், நீதிக்கான வாயிலை மேலும் விரிவுபடுத்தும் இலக்குடனும் இரண்டாவது ஆண்டாக நடைபெற்றது சிங்கப்பூர் நீதிமன்றங்கள் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சி.
சட்ட அமைச்சு, இலவசச் சட்டச் சேவை வழங்கும் ‘ப்ரோ போனோ எஸ்ஜி’ (Pro bono SG) அமைப்பு, நிதிக் கல்வியறிவுக் கழகம் (Institute for financial literacy), கடன் ஆலோசனை வழங்கும் ‘கிரெடிட் கவுன்சிலிங் சிங்கப்பூர்‘ (Credit Counselling Singapore) அமைப்பு ஆகியவற்றின் ஆதரவில் நடந்த இந்தக் கருத்தரங்கில் நிதி விவகாரங்களில் நாட்டம் கொள்ளும் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏறத்தாழ நூறு பேர் பங்கேற்றனர்.
நிதித் திட்டமிடல், கடன் அட்டைகளைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதற்கான குறிப்புகள், அக்கறையின்றிச் செலவழிப்பதால் ஏற்படும் உடல், உள நலன் சார்ந்த இதர பாதிப்புகள் ஆகியவற்றை விளக்கும் பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றன.
உச்ச நீதிமன்றப் பதிவாளர், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட பேராளர்கள் பலர் பங்கேற்று, பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
அதன் பிறகு நடைபெற்ற கேள்வி பதில் அங்கத்தில், ‘‘கடன் சுமைகளில் சிக்கியவர்களுக்குக் கிடைக்கும் சட்ட உதவிகள், நொடிப்புநிலை தொடர்பான மனுத் தாக்கல், அதன் தொடர்பில் கிடைக்கக்கூடிய நீதிமன்ற ஆலோசனைகளைப் பெறுதல் தொடர்பான கேள்விகளைப் பார்வையாளர்கள் எழுப்பினர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே மக்களுக்காக மேற்கொள்ளப்படும் இம்முயற்சி குறித்துக் கருத்துரைத்தார் சிங்கப்பூர் நீதிமன்றங்களின் ‘நீதிக்கான அணுகுமுறை’ (ஆக்சஸ் டூ ஜஸ்டிஸ் டிவிஷன்) எனும் பிரிவின் இயக்குநர் டஃப்னே குவெக்.
‘‘இம்முயற்சி நீதிக்கான அணுகுமுறையை மேம்படுத்த நீதித்துறை எடுத்து வரும் விரிவான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
‘‘நீதிமன்றங்களின் பங்கு, சட்டபூர்வ வாய்ப்புகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவ விரும்புகிறோம். அதன் தொடர்பில் விழிப்புணர்வுடன் முன்கூட்டியே அதை அறியும் வகையை அவர்களுக்கு கற்பிக்கவும் எண்ணம் கொண்டுள்ளோம்.
‘‘இதன்மூலம், தனிநபர்கள் தங்களின் நிதிச் சிக்கல்களுக்குத் தொடக்கத்திலேயே தீர்வுகாணவும், சரியான முடிவுகளை எடுக்கவும் இயலும்,’’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

