ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டாய் கடற்கரையில் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் சில இடங்களில் காவல்துறை கூடுதல் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
போண்டாய் கடற்கரையில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமுற்றனர்.
“காவல்துறை குறிப்பிட்ட சில இடங்களில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது. நிலைமைக்கு ஏற்றவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மாற்றியமைக்கப்படும்,” என்று உள்துறை அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) தெரிவித்தது. பாதுகாப்பு அமைப்புகள் அச்சுறுத்தல்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
பொதுமக்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று அமைச்சு சுட்டியது. தெரிந்தவர் பயங்கரவாத சித்தாந்தத்துக்கு ஈர்க்கப்பட்டுள்ளார் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என்ற சந்தேகம் இருந்தால் 1800-2626-473 என்ற எண்ணில் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் தெரியப்படுத்துமாறு உள்துறை அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
“பயங்கரவாதத்துக்கு எந்த வகையில் ஆதரவு தெரிவித்தாலும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதை மிகுந்த அக்கறையுடன் கருத்தில்கொண்டு செயல்படும். சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டவர் மட்டுமின்றி எல்லாருக்கும் இது பொருந்தும்,” என்று அமைச்சு எடுத்துரைத்தது.

