டான் சீ லெங், சண்முகத்திற்கு புளூம்பெர்க், செய்தியாளர் $290,000 செலுத்தவேண்டும்

டான் சீ லெங், சண்முகத்திற்கு புளூம்பெர்க், செய்தியாளர் $290,000 செலுத்தவேண்டும்

2 mins read
cbe7a4e5-a16e-47c2-8669-8fc88c5ea8b7
நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து புளூம்பெர்க், அதன் செய்தியாளர் லோ ட வெய் (நடுவில்) அமைச்சர்களுக்குத் தொகையைச் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அவதூறு வழக்கில் அமைச்சர்கள் டான் சீ லெங், கா. சண்முகம் இருவருக்கும் ஏற்பட்ட சட்டரீதியான செலவை ஈடுகட்ட அவர்களுக்கு புளூம்பெர்க் செய்தி நிறுவனமும் அதன் செய்தியாளர் லோ ட வெய்யும் மொத்தம் 290,000 வெள்ளியைச் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஜூலை 30) ரகசியமான முறையில் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு வெளிவந்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இரு அமைச்சர்களுக்கும் தலா 230,000 வெள்ளி இழப்பீடாக வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்குகளுக்கு ஆகும் செலவுகள் தொடர்பிலான வழிகாட்டிகளைக் கருத்தில்கொண்டு சட்டச் செலவை ஈடுகட்ட டாக்டர் டான், திரு சண்முகம் இருவருக்கும் ஆளுக்கு 145,000 வெள்ளியைச் செலுத்துமாறு நீதிபதி ஆட்ரி லிம் முடிவெடுத்ததாக நீதித்துறைப் பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

ஆறரை நாள் நீதிமன்ற வழக்குக்கான 65,000 வெள்ளியும் அத்தொகையில் அடங்கும்.

அமைச்சர்கள் தொடுத்த வழக்கு

மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சண்முகம், வர்ததகத் தொழில்துறை அமைச்சரான (எரிசக்தி, தொழில்துறை) டான் சீ லெங் இருவரும் புளூம்பெர்க்மீது வழக்கு தொடுத்திருந்தனர். சிங்கப்பூரில் உள்ள உயர்தர பங்களாக்களின் பரிவர்த்தனைகள் தொடர்பில் எழுதப்பட்ட கட்டுரைக்கு எதிராக அவர்கள் வழக்கு தொடுத்திருந்தனர்.

சொத்துச் சந்தை செய்தியாளரான லோ ட வெய், ‘சிங்கப்பூரின் மாபெரும் பங்களாக்களின் பரிவர்த்தனைகள் தொடர்ந்து ரகசியங்களில் மூழ்கியுள்ளன’ என்ற பொருளைக் கொண்ட ஆங்கிலத் தலைப்பில் கட்டுரையை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் அவர் சில தகவல்கள் போலியானவை என்று தெரிந்தே பயன்படுத்தினார் அல்லது அவற்றில் உண்மை உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் பதிவிட்டார் என்று இம்மாதம் 14ஆம் தேதி விதிக்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

புளூம்பெர்க் போன்ற தளங்களில் சில கட்டுரைகளை வாசிக்க மாதாந்தரக் கட்டணம் செலுத்தவேண்டும். அதை உறுதிப்படுத்தும் ‘பேவால்’ என்ற முறை சம்பந்தப்பட்ட அந்தக் கட்டுரைக்கு அகற்றப்பட்டதும் தவறான நோக்கத்தை எடுத்துக்காட்டுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.

அந்தக் கட்டுரையைப் பொதுமக்களில் அதிகமானோர் வாசிக்கவே அவ்வாறு செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்