இளையர்களின் ரத்த தானம் தொடர்ந்து குறைகிறது

இளையர்களின் ரத்த தானம் தொடர்ந்து குறைகிறது

3 mins read
22e11b40-aa59-400f-89ad-e335a83551bc
இளையர்கள் ரத்த தானம் செய்வதை ஊக்குவிக்கும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இயக்கத்தில் 18 வயது சார்மைன் டான் தொண்டாற்றி வருகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் ஒருபக்கம் மூப்படையும் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மறுபக்கம் இளையர்கள் ரத்த தானம் செய்வது தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட, குறிப்பாக முதியோர்களின் சிகிச்சைகளுக்குத் தேவைப்படும் ரத்தத்தை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

16லிருந்து 25 வயதுடைய இளையர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

2025ல் 9,600க்கும் மேற்பட்ட இளையர்கள் ரத்த நன்கொடை வழங்கியுள்ளனர். இது, மொத்தம் நன்கொடை வழங்குபவர்களில் 12 விழுக்காடு என்று 2026 ஜனவரியில் வெளியிடப்பட்ட சுகாதார அறிவியல் ஆணையத்தின் (எச்எஸ்ஏ) தரவுகள் தெரிவிக்கின்றன.

இது, 2015ஆம் ஆண்டைவிட 28 விழுக்காடு குறைந்துள்ளது.

2025ஆம் ஆண்டின் மொத்த மக்கள்தொகையில் ரத்த தானம் செய்வோரின் விகிதம் 1.3 விழுக்காடாகும். ஒட்டுமொத்தமாக ரத்த தானம் செய்வோரின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டின் 71,277லிருந்து 9 விழுக்காடு கூடி 2025ல் 77,567ஐ எட்டியிருக்கிறது.

அதே காலகட்டத்தில் ரத்தம் சேகரிக்கப்படும் பைகளின் எண்ணிக்கை கூடியிருக்கின்றன. அதாவது 122,048லிருந்து 136,172க்கு அது அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள்தொகை அதிகரிப்பதால் அது, ரத்த நன்கொடை வழங்கும் வயதுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று எச்எஸ்ஏ குறிப்பிட்டது.

2015ல் ரத்த நன்கொடை வழங்கியோரின் சராசரி வயது 34ஆக இருந்தது. ஆனால் 2025ல் அந்த வயது 40 ஆனது. அது மட்டுமல்லாமல் 2015ல் 21 முதல் 30 வயதில் இருந்தவர்கள் அதிகமாக ரத்த தானம் செய்துள்ளனர். இதுவே, 2025ல் 31 முதல் 40 வயது வரைப்பட்டவர்கள் ரத்த தானம் அதிகம் செய்துள்ளனர்.

மக்கள்தொகை மூப்படைவதால் ரத்த நன்கொடை அளிப்பவர்களின் வயதிலும் மாற்றம் ஏற்படுவதை இது காட்டுகிறது.

2030ஆம் ஆண்டுவாக்கில் நான்கு சிங்கப்பூரர்களில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2010ல் பத்தில் ஒருவர் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தார்.

இதன் காரணமாக, 2026ல் 80வது ஆண்டைக் கொண்டாடும் தேசிய ரத்த நன்கொடைத் திட்டத்திற்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது என்று எச்எஸ்ஐ கூறியது.

இளம் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை குறைவதாலும் இதுவரை ரத்த தானம் செய்த மூத்தவர்கள் உடல்நிலை காரணமாக அவர்களின் எண்ணிக்கை குறைவதாலும் ரத்த நன்கொடை வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.

சிங்கப்பூரில் ரத்தம் தேவைப்படுவோரில் 60 விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் என்று 2023ஆம் ஆண்டில் எச்எஸ்ஏ மேற்கொண்ட ஆய்வு கூறுகிறது.

மூப்படையும் மக்கள்தொகை கூடிக்கொண்டே இருப்பதால் மருத்துவ சிகிச்சைகளுக்காக ரத்தத்தின் தேவையும் அதிகரிக்கிறது என்பதை எச்எஸ்ஏ சுட்டிக்காட்டியது.

“அடுத்த தலைமுறை ரத்த தானம் செய்பவர்களை அதிகரிக்கவும் நீண்டகாலப் போக்கில் தேவைப்படுவோருக்கு ரத்தம் இருப்பதை உறுதிசெய்யவும் இளையர்கள் ரத்த தானம் செய்வது அவசியமாகிறது,” என்று எச்எஸ்ஏ வலியுறுத்தியது.

பெற்றோரின் பாதையைப் பின்பற்றி 16 வயதிலிருந்து ரத்த தானம் செய்யும் இளையரான சார்மைன் டான், இளையர்களை ஈர்க்கும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘யூத்இன்ஸ்பயர்’ திட்டத்தில் தொண்டூழியராகச் செயல்பட்டு வருகிறார்.

தற்போது 18 வயதாகும் அவர், மூன்று முறை ரத்த தானம் செய்துள்ளார். விரைவில் பல்கலைக்கழகத்தில் சேரவிருக்கும் அவர், தம் நண்பர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்க முடியும் என்று நம்புகிறார்.

குறிப்புச் சொற்கள்