வட்ட ரயில் பாதையின் நம்பகத்தன்மையில் ஆகப் பெரிய முன்னேற்றம்

வட்ட ரயில் பாதையின் நம்பகத்தன்மையில் ஆகப் பெரிய முன்னேற்றம்

2 mins read
a51dce79-8d29-4d4c-b940-4c428e6ea8f1
ஒட்டுமொத்த ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையும் இரண்டாவது மாதமாகத் தொடர்ந்து நிலையாக உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் ரயில் கட்டமைப்புகளில் வட்ட ரயில் பாதையின் நம்பகத்தன்மை மே மாதத்தில் ஆக அதிகமாக மேம்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த ரயில் கட்டமைப்பின் நம்பகத்தன்மையும் இரண்டாவது மாதமாகத் தொடர்ந்து நிலையாக இருப்பதற்கு வட்ட ரயில் பாதை முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இவ்வாண்டு மே மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் ஐந்து நிமிடங்களுக்குமேல் நீடித்த தாமதங்களுக்கு இடையே, கிட்டத்தட்ட 2.5 மில்லியன் கிலோமீட்டர்வரை எம்ஆர்டி ரயில்கள் பயணம் செய்துள்ளன.

2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பிறகு, சேவையில் ஏற்பட்ட தாமதங்களுக்கு இடையிலான ரயில் பயணங்கள் இரண்டாவது முறையாக 2 மில்லியன் கிலோமீட்டரைத் தாண்டியுள்ளன.

இதற்குமுன் ஏப்ரல் மாதத்தில் தாமதங்களுக்கு இடையிலான ரயில் பயணம் 2.22 மில்லியன் கிலோமீட்டராகப் பதிவாகின.

எஸ்எம்ஆர்டி நிறுவனம் நிர்வகிக்கும் வட்ட ரயில் பாதை, ஆகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

இவ்வாண்டு மே மாதம் தாமதங்கள் ஏற்படுவதற்குமுன் கிட்டத்தட்ட 3.55 மில்லியன் கிலோமீட்டர்வரை வட்டப் பாதையின் ரயில்கள் பயணம் செய்துள்ளன.

அதற்கு முந்தைய மாதத்தில் அது 2.36 மில்லியன் கிலோமீட்டராகப் பதிவானது.

பிற ரயில் பாதைகளின் நம்பகத்தன்மையில் பெரியளவில் மாற்றமில்லை அல்லது சிறிய முன்னேற்றம் காணப்பட்டன.

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் இயக்கும் வடக்கு - கிழக்கு பாதை நம்பகத்தன்மை மிகுந்த ரயில் பாதையாக நீடிக்கிறது.

இவ்வாண்டு மே மாதத்தில் தாமதங்களை எதிர்கொள்ளும்முன் சராசரியாக 4.46 மில்லியன் கிலோமீட்டர் வரை வடக்கு - கிழக்கு பாதை ரயில்கள் பயணம் செய்துள்ளன.

ஏப்ரல் மாதத்தில் அது 4.45 மில்லியன் கிலோமீட்டராக இருந்தது.

நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்திய மற்றொரு ரயில் பாதை வடக்கு - தெற்குப் பாதை.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின்கீழ் செயல்படும் அந்தப் பாதையில் தாமதங்களுக்கு இடையே ரயில்கள் சராசரியாக 1.65 மில்லியன் கிலோமீட்டர் வரை சென்றன.

அதற்கு முந்தைய மாதத்தில் கிட்டத்தட்ட 1.42 மில்லியன் கிலோமீட்டர் வரை ரயில்கள் பயணம் செய்தன.

சிங்கப்பூரின் ஐந்து எம்ஆர்டி பாதைகளிலும் எல்ஆர்டி கட்டமைப்புகளிலும் மே மாதத்தில் ஏற்பட்ட தாமதங்கள் 30 நிமிடங்களுக்குமேல் நீடிக்கவில்லை.

எனினும், ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெறாத தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் மிகப்பெரிய தாமதம் ஒன்று ஏற்பட்டது.

அதன் விளைவாக 5,000லிருந்து 50,000க்கு இடைப்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இவ்வாண்டு மே மாதம் தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் தாமதம் ஏற்படும்முன் கிட்டத்தட்ட  355,000 மில்லியன் கிலோமீட்டர் வரை ரயில்கள் பயணம் செய்தன. அதற்கு முந்தைய மாதம் அது 356,000ஆக இருந்தது.

குறிப்புச் சொற்கள்