தெமாசெக் உன்னத மாணவர் விருது 2026: முத்திரை பதித்த இந்திய இளையர்கள்

தெமாசெக் உன்னத மாணவர் விருது 2026: முத்திரை பதித்த இந்திய இளையர்கள்

3 mins read
2b208d99-39ad-43ca-94e8-6d813d81a7cd
தெமாசெக் உன்னத மாணவர் விருது வென்ற அஸ்வின் குமார் (இடது), ரேஷ்மா ரவிச்சந்திரன். இருவரும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் இவ்வாண்டு பட்டயம் பெற்றவர்கள். - படம்: கிறிஸ்டோ லியோன்
Google News Preferred Icon

தலைமைத்துவம், சமூகச் சேவை, விளையாட்டு, கலை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களைச் சிறப்பிக்கும் விதமாக, ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘தெமாசெக் உன்னத மாணவர் விருது’ (TSEA) வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 26ஆம் தேதி நடைபெற்றது.

விருது நிகழ்ச்சியில், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியை சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட சிறந்த மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த மாணவர் தலைவர் விருது பெற்ற ரேஷ்மா

இந்த ஆண்டு விருதுபெற்றவர்களில் ரேஷ்மா ரவிச்சந்திரனும் அஸ்வின் குமாரும் அவர்களின் கடின உழைப்பால் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்.

“தலைமைத்துவம் என்பது சத்தமாகப் பேசுவதோ எப்போதும் முன்னணியில் நின்று அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதோ மட்டுமன்று. புரிதலுடன் அனைவரையும் உள்ளடக்கிக்கொள்வதே சிறந்த தலைமைத்துவம்,” என்று கூறினார் 19 வயது ரேஷ்மா. 

ரேஷ்மாவுக்குச் ‘சிறந்த மாணவர் தலைவர் விருது’ கிட்டியது.

‘ஐஐடி ஸ்டடீஸ் கிளப்’ (IIT Studies Club) அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்த ரேஷ்மா, அவரின் ஆளுமையால் அதன் தலைவராக உயர்ந்தார்.

அந்தப் பதவியில் இருந்தபோது கிட்டத்தட்ட 30 நிகழ்ச்சிகளை நடத்தி அவற்றின் வாயிலாக ஏறக்குறைய 2,000 பங்கேற்பாளர்களை ஈடுபடுத்தினார்.

தொழில்நுட்பம் மூலம் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர்.

குறிப்பாக, அவர் நடத்திய ‘டிஜிட்டல் கம்போங்’ (Digital Kampung) நிகழ்ச்சி, முதியவர்களிடையே மின்னிலக்கக் கல்வியறிவை வளர்க்கவும் இணையப்பக்க மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவியது.

மேலும், சமூகத்திற்குப் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் ‘புரோஜெக்ட் சிம்பிள் ஹோம்ஸ்’ என்ற திட்டத்தின் மூலம் முதியவர்களின் வீடுகளுக்குச் சென்று வண்ணச்சாயம் பூசி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் தொண்டூழியப் பணி ஆற்றி வருகிறார்.

“நாம் செய்யும் மிகச் சிறிய நற்செயலும் சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நான் மேற்கொள்ளும் திட்டங்கள் சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும், குறிப்பாக முதியவர்களைச் சென்றடைய வேண்டும் என்பது என் நோக்கம்,” என்றார் ரேஷ்மா. 

வரும் ஆண்டில் இதுபோன்ற மின்னிலக்கத் திட்டங்களில் பணியாற்ற விரும்புகிறார் அவர்.

விளையாட்டிலும் கல்வியிலும் சிறந்த அஸ்வின்

ரேஷ்மாவைப்போல படிப்புக்கு அப்பால் சாதிக்கக் கூடியவை அதிகம் உள்ளன என்பதை நிரூபிக்கும்படி அஸ்வின் குமார் விளையாட்டில் கவனம் செலுத்தி  சிறந்த விளையாட்டு வீரர் விருதைப் பெற்றார்.

உயர்நிலைப் பள்ளியில் ஓட்டப்பந்தயங்களில் கலந்துகொண்ட அஸ்வின், பலதுறைத் தொழிற்கல்லூரியில் சேர்ந்த பிறகு சாதிக்க வேண்டும் என்ற உந்துதலோடு பயிற்சி செய்யத் தொடங்கினார்.

கடந்த நவம்பரில் அவருக்கு அக்கிலீஸ் (Achilles) எனும் தசைநார்க் காயம் ஏற்பட்டது. இருப்பினும், விடாமுயற்சியுடன் செயல்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து, இந்த ஆண்டு நடைபெற்ற பலதுறைத் தொழிற்கல்லூரி- தொழில்நுட்பக் கல்விக் கழகங்களுக்கிடையிலான POL-ITE, IVP போட்டிகளிலும் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

உயர்கல்வி நிலையங்களுக்கிடையிலானா ஓட்டப்பந்தயத்தில் 31 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனையை 1 நிமிடம் 54 நொடிகளில் ஓடி முறியடித்தார் அஸ்வின்.

“யார் வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம். ஆனால் தொடர்ச்சியான பயிற்சியும் சுயகட்டுப்பாடும்தான் முக்கியம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேகத்தில் முன்னேறுவார்கள், பொறுமையோடும் நம்பிக்கையோடும் பாடுபடும்போது வெற்றியை நிச்சயம் சுவைக்கலாம்,” என்றார் அஸ்வின்.

தேசியச் சேவைக்குப் பிறகு, தென்கிழக்காசிய விளையாட்டுகள் போன்ற பெரிய போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்க வேண்டும் என்பது அஸ்வினின் குறிக்கோள்.

குறிப்புச் சொற்கள்