அண்மையில் சிங்கப்பூர் உணவகங்கள் பல காரணங்களால் மூடப்படுவது தொடர்கதையாகிவுள்ளது.
அந்த வரிசையில் செந்தோசாவில் இயங்கிவந்த டிப்ஸி யூனிகார்ன் உணவு, கேளிக்கை மையம் கடந்த ஜனவரி 30ஆம் தேதியுடன் அதன் வாயிலை மூடியுள்ளது.
அந்நிறுவனத்திற்கு கடன் வழங்கியோரில் முக்கிய பங்குவகிக்கும் யுஓபி வங்கி உயர் நீதிமன்றத்தின் உதவியை நாடியதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் டிப்ஸி யூனிகார்ன் கடனீந்தோர்களின் கட்டாய மதிப்பீடுகளுக்கு தற்போது வழிவகுக்க வேண்டும். மூடப்பட்ட நிறுவனத்தை ஆய்வு செய்ய பிடிஒ அட்வைசரி (BDO Advisory) என்ற நிறுவனம் உள்பட பல தணிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வட்டியுடன் $96,000க்கும் மேற்பட்ட தொகையை டிப்ஸி நிறுவனத்திடம் மீட்க யுஓபி முற்பட்டுள்ளது. மேலும் பல அறிவிக்கப்படாத கடன் ஈந்தோர்கள் உள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன. நிறுவனத்தின் இயக்குநர்கள் நிறுவனத்தின் மொத்தக் கடன் பற்றிய முழு விவரங்களை வெளியிடவில்லை என்று தணிக்கையாளர்கள் கூறியுள்ளனர்.
நில உரிமையாளரான செந்தோசாத்தீவு மேம்பாட்டு கூட்டுநிறுவனம் (SDC) சம்பந்தப்பட்ட உணவு மையத்தை திரும்பப் பெற்றுவிட்டதாக வியாழக்கிழமை உறுதிசெய்துள்ளது. சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கானோர் பின்தொடரும் டிப்ஸி யூனிகார்ன், கடந்த ஜனவரி 26 வரையில் வழக்கமாக அவ்விடம் செயல்படுவதாக பதிவிட்டுள்ளது.
திடீரென அது மூடப்படுவது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

