‘ஏஐ’ யுகத்தில் அறிந்துகொள்ள ஆர்வமாக இருங்கள்: டிக்டாக் தலைமை நிர்வாகி

‘ஏஐ’ யுகத்தில் அறிந்துகொள்ள ஆர்வமாக இருங்கள்: டிக்டாக் தலைமை நிர்வாகி

2 mins read
82196898-d542-40ca-ba2d-42c3668e65f0
சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டமளிப்பு விழாவில் டிக்டாக் தலைமை நிர்வாக அதிகாரி ஷோ ஸி சியூ. - The Straits Times
Google News Preferred Icon

சிறுவயதில் கணினி விளையாட்டுகளில் செலவழித்த நேரமே, தொழில்நுட்பத்தைப் பற்றிய தமது ஆர்வத்தைத் தூண்டியதாக டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஷோ ஸி சியூ கூறியுள்ளார். அதுவே இறுதியில் தம்மை டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாவதற்கு வழிவகுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்களிடம் அவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) உரையாற்றினார்.

சிங்கப்பூரரான அவர், அறிந்துகொள்வதற்கான அந்த ஆர்வத்தையும் அனைவரின் எதிர்பார்ப்பில் இருந்து மாறுபட்டுச் செயல்படுவது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் தமது வாழ்க்கைத்தொழிலின் அடித்தளமாக அமைத்துக்கொண்டதாகக் கூறினார்.

1983இல் சிங்கப்பூரில் பிறந்த 43 வயதான சியூ, சிறுவயதில் தமது தந்தை வாங்கிக் கொடுத்த கணினியில் பல மணிநேரங்களைச் செலவிட்டதாகச் சொன்னார். அப்போதே அந்த எண்ணங்கள் மனத்தில் ஆழமாகப் பதிந்ததாக அவர் தெரிவித்தார்.

மொத்தம் 575 பட்டதாரிகள் முனைவர் பட்டத்தைப் பெற்ற முதலாவது பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.

“நான் அந்த கணினியைப் பயன்படுத்தி ஏதேனும் சிறப்பான மென்பொருளைக் குறியாக்கம் செய்து எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருந்தேன் என்று உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்; ஆனால், உண்மை என்னவென்றால் நான் கணினி விளையாட்டுகளைத் தான் விளையாடிக்கொண்டிருந்தேன். அதுவும் அதிகமான விளையாட்டுகளை விளையாடினேன்,” என்றார் அவர்.

அதன் பிறகு, தான் விசைப்பலகையையும் சிங்கப்பூரையும் விட்டு வெளியேறி, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பொருளாதாரம் படித்ததாகவும் அதைத் தொடர்ந்து ‘கோல்ட்மேன் சாக்ஸ்’ முதலீட்டு வங்கியில் பணியாற்றியதாகவும் அவர் பட்டதாரிகளிடம் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, அவர் ஹார்வர்ட் வர்த்தகப் பள்ளியில் வர்த்தக நிர்வாக முதுநிலைப் பட்டக்கல்வியை மேற்கொண்டார்.

தான் நிதித்துறையில் பணியாற்றியபோது, புத்தாக்கமான புதிய யோசனைகளிலும் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பெருமளவில் முதலீடுகள் குவியத் தொடங்கிய மிகப்பெரிய மாற்றத்தை நேரில் கண்டதாக அவர் கூறினார்.

2015இல், சீனத் திறன்பேசி நிறுவனமான ‘சியாவ்மி’யின் தலைமை நிதி அதிகாரியாக அவர் பொறுப்பேற்றார். பின்னர், ‘பைட்டான்ஸ்’ எனும் டிக்டாக்கின் முதன்மை நிறுவனத்திற்கு மாறிய அவர், 2021முதல் டிக்டாக் நிறுவனத்திற்குத் தலைமைதாங்கி வருகிறார்.

தமது வாழ்க்கைத்தொழிலைத் தொடங்கிய காலத்தில் மின்னிலக்க உருமாற்றம் ஏற்படுத்திய தாக்கத்தைப் போல, பட்டதாரிகள் இணையவிருக்கும் ஊழியரணியைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மறுவடிவமைத்துவருவதாக அவர் கூறினார்.

இத்தகைய சூழலில், அறிந்துகொள்வதற்கான தங்கள் ஆர்வத்தைத் தொடருமாறு சியூ பட்டதாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்