பத்துமலை முருகனின் வேல் இவ்வாண்டு சிங்கப்பூர் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் முருகனிடம் செலுத்தப்பட்டது; செலுத்தியது ‘டவுண் சிண்ட்ரோம்’ எனும் மதியிறுக்க நோய் உள்ள திரு முரளிதரன், 51.
வேண்டுதலாக அவர் நான்கு வயதிலிருந்து ஆண்டுதோறும் முருகனுக்கு வேல் செலுத்திவந்துள்ளார்.
“முருகனின் அருளால் இன்று அவரது ஆரோக்கியம் நன்கு மேம்பட்டுள்ளது. அவர் முகத்தில் களை தெரிகிறது. நன்றாகப் பேசுகிறார். முன்பு நடக்கச் சிரமப்பட்டார்; அவரை நடக்க வைத்ததும் முருகன்தான்,” என்றார் அவரைத் தவறாமல் கோயிலுக்கு அழைத்துவரும் தந்தை புருஷோத்தமன், 86.
தன் மகன் இன்று நல்ல மனிதராக, சுயமாக வாழக்கூடியவராகத் திகழ்வதற்கும் முருகனே காரணம் என்றார் திரு புருஷோத்தமன்.
அண்மையில் பத்துமலைக்குச் சென்றுவந்தபோது, அங்கிருந்து வேல் ஒன்றைத் திரு முரளிக்காக வாங்கினார் திரு புருஷோத்தமன். “பத்துமலை முருகன் மிகவும் சக்திவாய்ந்தவர். எல்லோருக்கும் அவரது வேலைப் பெறும் வாய்ப்பு கிடைக்காது. முருகனின் சன்னதியில் வைத்து கும்பிட்டு சிங்கப்பூருக்கு எடுத்துவந்தேன்,” என்றார் திரு புருஷோத்தமன்.
முன்பெல்லாம் பெருமாள் கோயிலிலிருந்து பால்குடம் ஏந்தியபடி திரு புருஷோத்தமன், தன் மனைவியுடனும் மகனுடனும் நடந்துவருவார். “என் மனைவி சரஸ்வதி ஜென்மப் பால்குடம் எடுத்துவருபவர்,” என்றார் அவர்.
“ஆனால், சில ஆண்டுகளுக்குமுன் என் மனைவியின் மறைவுக்குப் பிறகு மகன் மனமுடைந்துபோனார். அதனாலோ என்னவோ சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது,” என்றார் திரு புருஷோத்தமன்.
வெகுதூரம் நடக்க இயலாததால் இவ்வாண்டு டோபி காட் பகுதிக்கு திரு முரளிதரனை டாக்சியில் அழைத்துவந்து அங்கிருந்து தெண்டாயுதபாணி கோயிலுக்கு திரு முரளிதரன் வேல் ஏந்தியபடி சென்றார்.
தொடர்புடைய செய்திகள்
வேலை நல்லபடியாகச் செலுத்தியதும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலில் அவர்கள் அன்னதானமளித்தனர். “இது என் மாமனார் திரு சிங்காரம் கடைப்பிடித்துவந்த வழக்கம்,” என்றார் திரு புருஷோத்தமன்.
தன் வயதான காலத்தில் திரு முரளிதரனைப் பராமரிக்க இயலாததால் அரசாங்க மானியங்களின் உதவியுடன் அவரை தாய் ஹுவா குவான் தாதிமை இல்லத்தில் வைத்துள்ளார் திரு புருஷோத்தமன். “அங்கு அவருக்காக நிறைய நடவடிக்கைகளுக்கு ஏற்பாடுசெய்யப்படுகின்றன. அவர் சந்தோஷமாக இருக்கிறார்,” என அவர் கூறினார். வாரம் மும்முறை மகனைச் சந்திக்க அவர் செல்கிறார்.
இவ்வாண்டு இருவருக்கும் உடல் ஆரோக்கியம் நிறைந்த நல்ல ஆண்டாக அமையவேண்டும் என அவர் வேண்டிக் கொண்டார்.

