சிங்கப்பூரின் தேசியப் பூப்பந்து வீரர் லோ கியன் யூ, பல ஆண்டுகள் வாடகை வீட்டில் இருந்து தற்போது சொந்த வீட்டின் உரிமையாளராகியுள்ளார்.
ஜூன் 8ல் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவின்வழி லோ இதனைக் கூறினார்.
புதிய வீட்டின் சிறு தோற்றத்தைப் பகிர்ந்துகொண்ட லோ, தனக்கென்று ஒரு சொந்த வீடு வாங்குவது சிறு வயதிலிருந்தே கனவாக இருந்து வருவதாகக் கூறினார்.
பினாங்கில் பிறந்த லோ, 13 வயதில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த தமக்கு பெரும்பாலும் வாடகை அறைகளே வீடாக இருந்ததாகக் கூறினார்.
“நானும் என் சகோதரரும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டை மாற்றிக்கொண்டே இருப்போம். குத்தகை முடிவடைந்தாலோ, சில சமயங்களில் எங்களுக்குக் கட்டுப்படியாகக்கூடிய வேறு ஓர் இடம் கிடைத்தாலோ மாறுவோம்,” என்று அவர் கூறினார்.
இருமுறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவரும் முன்னாள் ஆடவர் ஒற்றையர் பிரிவின் உலக வெற்றியாளராகவும் திகழ்கிறார் லோ.
சிங்கப்பூரில் சொந்த வீடு வாங்குவது எப்போதுமே பெரிய இலக்காகக் கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“காலம் கடந்து இன்று, 29 வயதில் எனக்கென்று ஒரு குடும்பமும், வீடு என்று சொல்லிக்கொள்ள ஓர் இடமும் இருக்கிறது,” என்று அவர் தமது பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


