மத்திய கிழக்கில் நீடித்து வரும் பூசல் காரணமாக உலகளாவிய விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டிருக்கும் இடையூறு, பயணக் காப்பீடு மீது கவனத்தைத் திருப்பி உள்ளது.
வழக்கமான தனிநபர் மற்றும் வர்த்தகப் பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் போர் தொடர்பான இழப்புகளை உள்ளடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சில தனித்துவ வர்த்தகப் பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் போர் மற்றும் மோதல்களினால் ஏற்படும் இழப்புகளை உள்ளடக்கும்போது, பெரும்பாலான நிறுவனங்கள் அதற்கு அதிகம் செலவழிக்கும் நிலை உள்ளது.
வரம்புகள் இருந்தபோதிலும், அவசரகால சூழ்நிலைகளில் மன அமைதிக்காக, தனிநபர்களும் வணிகப் பயணிகளும் பயணக் காப்பீட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் சந்தை ஆய்வாளர்கள்.
துபாய், தோஹா மற்றும் அபுதாபியில் உள்ள விமான நிலையங்கள், ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் விமானங்களுக்கான முக்கிய இடைநிறுத்த மையங்கள்.
எனவே, பதற்றங்கள் ஏற்பட்டு விமானச் சேவைகள் முடக்கப்பட்டு, வான்வெளி மூடப்பட்டதாலும், விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் அல்லது மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதாலும் பல பயணிகள் பரிதவிக்க நேர்ந்தது.
விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் ஹோட்டல்களில் தங்கும் காலம் அதிகரித்ததாலும் நேடியாகவோ மறைமுகமாகவோ பயணக் காப்பீட்டுக் கோரிக்கைகள் எழும். ஆனால், அத்தகைய கோரிக்கைகளை பயணக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளடக்கவில்லை என்பதை அறிந்த பயணிகள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
அதுபற்றி விளக்கிய சிங்கப்பூர் பொதுக் காப்பீட்டுச் சங்கத்தின் பேச்சாளர், பேரழிவுகளால் ஏற்படும் நிகழ்வுகள் ஒரேநேரத்தில் ஏராளமான காப்பீட்டுக் கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
ஆயுத மோதல்களின் போக்கும் கணிக்கமுடியாத நிலையும் காப்பீடு செய்துகொள்வோர் விலை நிர்ணயம் செய்வதில் சிரமங்களை ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர்.
எனவே பயணச் சீட்டுக்கு முன்பதிவு செய்யும்போது காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றியும் அரசாங்க ஆலோசனைகள் பற்றியும் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

