தானியங்கி வாகனமும் தொலைந்துபோகும் ஓட்டும் அனுபவமும்

தானியங்கி வாகனமும் தொலைந்துபோகும் ஓட்டும் அனுபவமும்

3 mins read
386a9cfc-0fed-47aa-97da-4db8eb864e42
இவ்வாண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 100 முதல் 150 தானியங்கி வாகனங்கள் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கொவிட்- 19 பெருந்தொற்று காலகட்டம், அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையையும் முடக்கிப் போட்டது. அப்போது, ஒரு மூட்டை அரிசி வாங்கச் சிங்கப்பூரின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்குப் பயணம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.

நீண்ட தூரப் பயணம்தான் எனினும் போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலையில் கார் ஓட்டும் சுகமே தனி என அந்த நினைவுகள் இன்றும் பசுமையாகப் பலரின் மனத்தில் நிலைத்து இருக்கின்றன. அந்தப் பயணத்தின் நோக்கம் வெறும் உணவன்று. கார் ஓட்டுவதில் கிடைத்த அந்தச் சுதந்திரமும் மகிழ்ச்சியும்தான்.

தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பொங்கோல் வட்டாரத்தில் தானியங்கி வாகனங்கள் ஓடத் தொடங்கிவிட்டன. சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில், ஃபேர்பிரைஸ் குழுமம் தனது கிடங்குகளுக்கு இடையே பொருள்களைக் கொண்டு செல்வதற்குத் தானியங்கி வாகனங்களைச் சோதனை ஓட்ட முறையில் பயன்படுத்தி வருகிறது.

இவ்வாண்டின் இறுதிக்குள் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 100 முதல் 150 தானியங்கி வாகனங்கள் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. தானியங்கி வாகனங்களுக்கு ஆதரவாகப் பல வலுவான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தத் தொழில்நுட்பம் மனிதவளத் தட்டுப்பாட்டை ஈடுசெய்யும் என்றும் பல உயிர்களைக் கூடக் காப்பாற்றக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இயந்திரங்கள் கவனச்சிதறலுக்கு உள்ளாவதில்லை; அவை எளிதில் சோர்வடையாது; மிகவும் துல்லியமாகப் பணியைச் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவை.

பயணி அல்லது தளவாட நிறுவனத்தின் கண்ணோட்டத்தில், வேலையினால் மன அழுத்தத்திற்கு உள்ளான, வாட்ஸ்அப் செய்திகளால் கவனம் சிதறிய மனிதரிடம் காரின் முழு பொறுப்பையும் ஒப்படைப்பதை விட, தானியங்கி வாகனம் ஒரு சிறந்த மேம்பட்ட மாற்றமாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.

ஓட்டுநரின் பார்வையில், தானியங்கி வாகனங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட சில பாதுகாப்புச் சார்ந்த மென்பொருள்களும் உணர்கருவிகளும் பயன்பாட்டில் இருப்பது நல்லது என்கின்றனர்.

ஓட்டுநருக்கு வாகனத்தின்மீது போதுமான கவனம் இல்லாத நேரங்களில் இந்தத் தொழில்நுட்பம், சாலையில் பயணம் மேற்கொள்ளும் பல உயிர்களைப் பாதுகாக்கும் என ஓட்டுநர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் மக்களுக்குப் பாதுகாப்புதான் என்றாலும், சில நேரங்களில் ஆபத்துகள் இருப்பதாகத் தானாகவே கற்பனை செய்துகொண்டு ஓட்டுநரின் விருப்பத்திற்கு மாறாகக் காரை அவை இயக்குவதாக வாகன விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும்பாலான நேரங்களை ஓட்டுநர்கள் இழப்பதைத் தவிர்த்து அந்நேரத்தைப் பயனுள்ள செயல்களைச் செய்ய அவர்களை இந்தப் புதிய தொழில்நுட்பம் அனுமதிக்கும் என்பதும் தானியங்கி வாகனங்களை ஆதரிப்பதற்குக் கூறப்படும் மற்றொரு முக்கியமான காரணமாகும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மானிய கார் நிறுவனமான ஆடி (Audi), ‘25வது மணிநேரம்’ என்ற சொற்றொடரை உருவாக்கியது.

அதாவது, இலக்கை அடையும் வரை கார் ஓட்டும் வேலையிலிருந்து விடுபடுவதன் மூலம், ஓட்டுநர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் நேரத்தை இது குறிக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் புத்தகங்கள் படிக்கலாம், உறங்கலாம் அல்லது தங்கள் அலுவலகச் செலவுக் கணக்குகளை முடிக்கலாம்.

நிச்சயமாக, வேலைப்பளு மிகுந்த நாளில், தானியங்கி வாகனத்தின் மூலம் அத்தகைய நேரத்தை மிச்சப்படுத்துவது மிகவும் உதவியாக இருக்கும். இந்த வசதி இப்போதும் நமக்குக் கிடைக்கிறது. டாக்சி, பெருவிரைவு ரயிலில் பயணம் செய்யும்போது அந்த அமைதியை நாம் உணரலாம்.

ஆனால், வாரயிறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை காலை, உங்கள் காரில், உங்களுக்குப் பிடித்த பாடல்களை ஒலிக்கவிட்டு, கேட்டவாறே சிங்கப்பூரின் மறுமுனைக்கு நீங்களாகவே கார் ஓட்டிச் செல்வதைச் சற்று யோசித்துப் பாருங்கள். அந்தச் சுகமே அலாதியானது!!!

குறிப்புச் சொற்கள்
தானியங்கிசோதனைபோக்குவரத்துநிறுவனம்கார்