ஆட்ரி ஃபாங் வழக்கு: சந்தேக நபரின் தடுப்புக்காவலை நீட்டிக்க கோரிக்கை

ஆட்ரி ஃபாங் வழக்கு: சந்தேக நபரின் தடுப்புக்காவலை நீட்டிக்க கோரிக்கை

2 mins read
4eb0a66d-d2e3-4b69-aefd-b3541a9690ac
சென்ற 2024ஆம் ஆண்டு ஏப்ரலில், சிங்கப்பூரரான ஆட்ரி ஃபாங்கைக் கொலை செய்ததாக மிட்செல் ஓங் (இடது) மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. - படங்கள்: ஸ்ட்ரோங்கெஸ்ட்ஏ‌ஷியன்/இன்ஸ்டகிராம், ஃபாங் டிராவ்/ ஃபேஸ்புக்

ஸ்பெயினில் கடந்த 2024ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட ஆட்ரி ஃபாங் என்ற மாதின் குடும்பத்தார், சந்தேக நபர் மிட்செல் ஓங்கை மேலும் ஈராண்டுக்குத் தடுப்புக்காவலில் வைக்க ஸ்பானிய நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்பெயினுக்குத் தனியாகப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூரரான திருவாட்டி ஃபாங், 30 கத்திக்குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூரரான ஓங், 43, ஸ்பெயினில் 2024ஆம் ஆண்டு ஏப்ரலில் கைதுசெய்யப்பட்டார்.

ஓங்கின் வழக்கு விசாரணைக்கு முந்திய தடுப்புக்காவல் காலம் விரைவில் நிறைவுபெறும் என்று திருவாட்டி ஃபாங்கின் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் மானுவெல் மார்ட்டினெஸ் குறிப்பிட்டார்.

விடுவிக்கப்பட்டால், நீதியிலிருந்து தப்பிக்க ஓங் முயற்சி செய்யக்கூடும் என்பதால், அவரைக் கூடுதல் காலம் தடுத்துவைக்குமாறு திரு மார்ட்டினெஸ் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.

ஓங் தற்போது வழக்கு விசாரணைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 15 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

இருப்பினும், ஓங்கிற்காக நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர், அந்த வழக்கு கைவிடப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்ற 2024ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி, திருவாட்டி ஃபாங், 39, ஸ்பெயினுக்குச் சென்றார். ஏப்ரல் 9ஆம் தேதி, அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. முன்னாள் சக ஊழியர் ஒருவரை அங்குச் சந்திக்கக்கூடும் என்று திருவாட்டி ஃபாங் அவரது குடும்பத்திடம் தெரிவித்திருந்தார்.

திருவாட்டி ஃபாங்கும், ஓங்கும் காதலர்களாக இருந்திருக்கலாம் என்று திருவாட்டி ஃபாங்கின் நண்பர்கள் ஸ்பானிய நீதிமன்றத்தில் கூறியிருந்தனர். அவர்கள் இருவரும் சமூகத் தளம் ஒன்றில் அறிமுகமானதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்