சிங்கப்பூரின் ஏஸ்டர் கெமிக்கல்ஸ் அண்ட் எனர்ஜி நிறுவனம் செலவைக் குறைக்கும் நோக்கத்துடன் இவ்வாண்டின் பிற்பாதியில் சில திட்டங்களை நிறைவேற்ற எண்ணியிருக்கிறது.
எண்ணெய்ச் சுத்திரிகரிப்பு அளவை அதிகரிக்கவும் பெரிய கப்பல்களில் எண்ணெயை இறக்குமதி செய்யவும் அது திட்டமிடுகிறது. நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆண்ட்ரே கோர் அந்தத் தகவலை வெளியிட்டார்.
இந்தோனீசியாவின் சந்திரா அஸ்ரியும் கிளென்கோரும் இணைந்து அந்த நிறுவனத்தைத் தொடங்கியுள்ளன. ஜூரோங் தீவின் புலாவ் புக்கோமில் உள்ள ஷெல்லின் சுத்திகரிப்பு ஆலையையும் மற்றப் பெட்ரோலிய ரசாயனச் சொத்துகளையும் கடந்த ஆண்டு (2025) ஏப்ரலில் வாங்கிய பிறகு, போட்டித்தன்மையை அதிகரிப்பதற்காகப் பல புதிய திட்டங்களை நிறுவனம் அறிவித்தது.
நாளுக்கு 70,000 பீப்பாய்கள் எண்ணெய், எரிவாயுவைப் பிரித்தெடுக்க ஏஸ்டர் நிறுவனம் பெட்ரோகெமிக்கல் கார்ப் ஆஃப் சிங்கப்பூரிடமிருந்து வாங்கிய கட்டமைப்பு இவ்வாண்டு பிற்பாதியிலிருந்து செயல்படத் தொடங்கும் என்று திரு கோர் கூறினார். புதன்கிழமை (பிப்ரவரி 4) ராய்ட்டர்ஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலின்போது அந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சீரமைக்கப்பட்ட ஆலையால் கூடுதலாக 30 விழுக்காட்டு எண்ணெய், எரிவாயுவைப் பிரித்தெடுக்க முடியும். ஏற்கெனவே அது நாளுக்கு 237,000 பீப்பாய் எண்ணெய், எரிவாயுவைப் பிரித்தெடுக்கிறது. இனி அது 307,000 பீப்பாய்க்குக் கூடும்.
கூடுதல் எத்திலின், இந்தோனீசியாவில் உள்ள சந்திரா அஸ்ரியின் பெட்ரோலியரசாயன வளாகத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றார் திரு கோர்.
ஏஸ்டர், அதன் ஒற்றை மிதவையை நங்கூரமிடும் பணிகள் இவ்வாண்டின் பிற்பாதிக்குள் நிறைவுறும் என்று எதிர்பார்க்கிறது. கச்சா எண்ணெயை ஏந்திவரும் மிகப் பெரிய கப்பல்கள் நங்கூரமிடவும் 2 மில்லியன் பீப்பாய் எண்ணெய்யைப் பரிமாற்றவும் அது வழிவிடும் என்று நம்பப்படுகிறது. தற்போது புக்கோம் சுத்திகரிப்பு நிலையம், கச்சா எண்ணெயை மத்திய கிழக்கு, மலேசியா, பிரேசில் முதலியவற்றிடமிருந்து சிறிய கப்பல்களில் பெறுகிறது.

