விபத்தில் மாண்ட சிறுமியின் தந்தைக்கு இலவசத் தங்குமிடம் வழங்க முன்வந்துள்ள ஆஸ்காட் ஹோட்டல்

விபத்தில் மாண்ட சிறுமியின் தந்தைக்கு இலவசத் தங்குமிடம் வழங்க முன்வந்துள்ள ஆஸ்காட் ஹோட்டல்

2 mins read
5cdf91f6-ace0-461e-b36e-6ada4991f112
விபத்தில் மாண்ட 6 வயது சிறுமி ஷேனா லஷிரா ஸ்மாராடியானி (இடது). சிறுமியின் தாயாரான திருவாட்டி ரயிஷா அனிந்திரா பஸ்கசிஸ்வி விபத்தில் படுகாயம் அடைந்தார். அவருக்குச் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. - படம்: ரயிஷா அனிந்திரா/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

சைனாடவுனில் பிப்ரவரி 6ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் மாண்ட 6 வயது சிறுமியான ஷேனா லஷிரா ஸ்மாராடியானியின் தந்தை தமது ஹோட்டலில் இலவசமாகத் தங்கலாம் என்று ஆஸ்காட் ஹோட்டல் குழுமம் தெரிவித்துள்ளது.

மீளாத் துயரில் மூழ்கியிருக்கும் திரு அஷார் ஆர்டியான்டோவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆஸ்காட் ஹோட்டல் குழுமம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது.

“இந்த மிகச் சோகமான, சிரமமிக்க காலகட்டத்தில் சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தமது மனைவியுடன் இருக்கும் திரு அஷார் எங்கள் ஹோட்டலில் இலவசமாகத் தங்கலாம்,” என்று ஆஸ்காட் ஹோட்டல் குழுமம் புதன்கிழமை (பிப்ரவரி 11) கூறியது.

சிறுமி ஷேனாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த அதே சாலை விபத்தில் அவரது தாயாரான திருவாட்டி ரயிஷா அனிந்திரா பஸ்கசிஸ்வி படுகாயம் அடைந்ததாகச் சிங்கப்பூரில் உள்ள இந்தோனீசியத் தூதரகம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது.

அவருக்குச் சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திரு ரயிஷாவை இந்தோனீசியாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தார் விருப்பம் தெரிவித்திருந்ததாக இந்தோனீசியத் தூதரகம் தெரிவித்தது.

ஆனால், மருத்துவமனையிலிருந்து வெளியேறி பயணம் மேற்கொள்ளக்கூடிய நிலையில் திருவாட்டி ரயிஷாவின் உடல்நிலை இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததாகத் தூதரகம் கூறியது.

திரு அஷாரின் குடும்பம் விடுமுறைக்காகச் சிங்கப்பூருக்கு வந்திருந்தனர். சைனாடவுன் வட்டாரத்தில் திருவாட்டி ரயிஷா, சிறுமி ஷேனா ஆகியோர் மீது கார் ஒன்று மோதியது.

இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மூளையில் ஏற்பட்ட மிகக் கடுமையான காயங்கள் காரணமாக ஷேனா உயிரிழந்தார்.

அவரது உடல் பிப்ரவரி 8ஆம் தேதி காலை இந்தோனீசியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்