2025ல் விலங்குவதைச் சம்பவங்கள் குறைந்தன: ஆய்வு

அதிகம் பூனைகளே பாதிப்புக்குள்ளாகின்றன

2025ல் விலங்குவதைச் சம்பவங்கள் குறைந்தன: ஆய்வு

2 mins read
c0503082-9426-4d0a-b6cc-4b86c571afc9
சித்திரவதைக்குள்ளான விலங்குகள். - படம்: விலங்குகள் வதைத் தடுப்புச் சங்கம்
Google News Preferred Icon

விலங்கு வதை, அவற்றின் நலவாழ்வுப் பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் 2024ஆண்டுடன் ஒப்பிட 2025ல் சரிவைக் கண்டன. எனினும், பெரும்பாலானவை மோசமான பராமரிப்பு அல்லது புறக்கணிப்பை உள்ளடக்கியவை.

கடந்த ஆண்டில் உறுதிப்படுத்தப்பட்ட மொத்தம் 608 சம்பவங்கள் குறித்து விலங்கு வதைத் தடுப்புச் சங்கம் (எஸ்பிசிஏ) விசாரித்தது. இது 2024ஆம் ஆண்டின் 961 சம்பவங்களைவிட பெருமளவு குறைவு என்று திங்கட்கிழமை (பிப்ரவரி 2) வெளியிடப்பட்ட சங்கத்தின் ஆண்டறிக்கை தெரிவித்துள்ளது.

அதில் 470 சம்பவங்கள் அவற்றின் நலம் சார்ந்தவை, 138 விலங்கு வதை தொடர்பானவை.

மொத்தம் 1,584 விலங்குகள் பலியாயின. அதாவது, ஒவ்வொருநாளும் சராசரியாக நான்கு விலங்குகள் துன்பத்திற்கு அல்லது மரணத்திற்கு உள்ளாகின்றன.

2025ல் பாதிக்கப்பட்ட விலங்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை பூனைகள்.

எண்ணிக்கை குறைந்திருப்பது ஊக்கமளிப்பதாக இருந்தாலும், வருடாந்திர எண்ணிக்கை இன்னும் அச்சமூட்டுவதாக உள்ளது. குறிப்பாக, இந்த எண்ணிக்கை அறிந்த சம்பவங்களை மட்டுமே வைத்து கணிக்கப்பட்டுள்ளது என்று எஸ்பிசிஏ கூறியது.

“தேசிய அளவிலான எண்ணிக்கை மிகவும் அதிகம்,” என்று அது கூறியது.

அறிக்கையின்படி, 2025ல் அனைத்து வகைப்பாடுகளிலும் விலங்கு வதைச் சம்பவங்கள் பொதுவாகக் குறைந்துள்ளன.

பெரும்பாலான விலங்கு வதைச் சம்பவங்கள் கைவிடுதல், உடல் ரீதியாக துன்புறுத்தப்படுதல் தொடர்பானவை. அவை முறையே 42 விழுக்காடாகவும் 25 விழுக்காடாகவும் உள்ளது.

விலங்குகளைக் கைவிடும் சம்பவங்கள் 2025ஆம் ஆண்டில் 58ஆக குறைந்தன. அதற்கு முந்திய ஆண்டு அது 120ஆக இருந்தது. இதற்கிடையே, உடல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் 2024ஆம் ஆண்டில் 84ஆக இருந்த நிலையில், 2025ல் 35ஆகக் குறைந்துள்ளது.

விலங்குகளுக்கு காயம் அல்லது மரணம் விளைவித்த 21 சம்பவங்கள், சாலைப் போக்குவரத்து விபத்துகள் தொடர்பான 15 சம்பவங்கள், மனிதாபிமானமற்ற முறையில் சிக்கிக் கொண்ட ஒன்பது சம்பவங்கள் ஆகியவையும் பதிவாகின.

கைவிடப்படும் விலங்குகள் பெரும்பாலும் சுகாதாரப் பிரச்சினைகளைக் கொண்ட முதிய விலங்குகள் என்றும் இதில் பூனைகள் மிகப் பெரிய அளவில் உள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டது.

பயிற்சி என்ற போர்வையில் அல்லது தவறான வழிகாட்டுதலின் கீழ் அவை அடிக்கடி உடல் ரீதியாக வதைக்கப்படுவதாகவும் அது சுட்டியது.

2025ல் பதிவான 35 சம்பவங்களில் பதினாறு விலங்குகள் பயிற்சி அளிப்பின்போது கடுமையாகக் கையாளப்பட்டவை அல்லது துன்புறுத்துபவரின் விரக்தியின் காரணமாக சித்திரவதைக்குள்ளானவை ஆகும்.

இது தவிர, சமூக ஊடகம் உள்ளடக்கத்திற்காக அல்லது அவை புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அவை துன்புறுத்தப்படலாம் என்றும் சங்கம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்விலங்கு வதைசிறுவன்பாதிப்புசித்திரவதை