கதவுகளைத் தற்காலிகமாக மூடும் அங் மோ கியோ, குவீன்ஸ்டவுன் நூலகங்கள்

கதவுகளைத் தற்காலிகமாக மூடும் அங் மோ கியோ, குவீன்ஸ்டவுன் நூலகங்கள்

2 mins read
bae82c99-ba4c-4dcc-9526-900c166b3307
அங் மோ கியோ நூலகம் (இடது) குவீன்ஸ்டவுன் நூலகம் ஆகியவற்றின் சித்திரிப்பு. - படங்கள்: தேசிய நூலக வாரியம்/ ஃபேஸ்புக்
Google News Preferred Icon

அங் மோ கியோ, குவீன்ஸ்டவுன் ஆகிய வட்டாரங்களில் உள்ள நூலகங்கள் இவ்வாண்டின் பிற்பாதியில் தற்காலிகமாக அவற்றின் கதவுகளை மூடவிருப்பதாகத் தேசிய நூலக வாரியம் திங்கட்கிழமை (ஜூன் 22) அறிவித்தது.

4300 அங் மோ கியோ அவென்யூ 6ல் தற்போது செயல்பட்டுவரும் அங் மோ கியோ நூலகம் ஜூலை 31ஆம் தேதியுடன் அதன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளும்.

இவ்வாண்டு நவம்பர் 20ஆம் தேதி அங் மோ கியோ நடுவத்தின் கடைத்தொகுதியில் நூலகம் அதன் கதவுகளை மீண்டும் திறக்கும்.

“பசுமை வளாகத்தில் புத்துணர்ச்சியூட்டும் அனுபவத்தை நூலகப் பிரியர்களுக்கு நூலகம் வழங்கும்,” என்று தேசிய நூலக வாரியம் தெரிவித்தது.

புதிய வளாகத்தில் உயரமான அலமாரிகள், அக்கம்பக்க நினைவுச்சின்னங்களை நினைவூட்டும் அம்சங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என்று வாரியம் இதற்குமுன் கூறியிருந்தது.

புதிய நூலகம் திறக்கும்வரை அங் மோ கியோ நடுவக் கடைத்தொகுதியின் நான்காம் தளத்தில் உள்ள பிரவுஸ்-என்-போரோ என்ற வசதியை நூலகப் பிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி வாரியம் குறிப்பிட்டது.

இதற்கிடையே, 53 மார்கரெட் டிரைவ்வில் உள்ள குவீன்ஸ்டவுன் நூலகம் ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் அதன் கதவுகளை மூடுகிறது.

புதுப்பிப்புப் பணிகள் முடிந்து புதுப்பொலிவுடன் அந்த நூலகம் 2028ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சிங்கப்பூரின் ஆகப் பழைய நூலகத்தின் முகப்பு பாதுகாக்கப்படும். நூலகத்தின் புதிய வடிவங்களில் குவீன்ஸ்டவுன் சமூகத்தையும் நூலகத்தின் செழுமையான மரபுடைமையையும் எடுத்துக்காட்டும் அம்சங்கள் சேர்த்துக்கொள்ளப்படும்,” என்று வாரியம் சொன்னது.

குவீன்ஸ்டவுன் நூலகம் 1970ஆம் ஆண்டு முதன்முதலில் செயல்படத் தொடங்கியது. 2013ஆம் ஆண்டு, அது, பாதுகாக்கப்படும்படி அரசிதழில் இணைக்கப்பட்டது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் மேம்பாட்டுப் பணிகளுக்காக நூலகத்தை மூட முதலில் திட்டமிடப்பட்டது.

இதற்குமுன் புதுப்பிக்கப்பட்ட புக்கிட் பாத்தோக் நூலகம் இவ்வாண்டின் தொடக்கத்தில் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்