அமெரிக்கா, நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் புதிதாக 15 விழுக்காட்டு வரியை விதிக்கப்போவதாகக் கூறியிருப்பது சிங்கப்பூருக்கும் பொருந்தக்கூடும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர், அடிப்படையில் மாற்றம் கண்டுள்ள உலக வர்த்தகச் சூழலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இதற்கு முன்னர், 10 விழுக்காட்டுத் தீர்வை விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இப்போது அதனை 15 விழுக்காட்டுக்கு உயர்த்தப்போவதாகக் கூறியுள்ள நிலையில், திரு கானின் கருத்துகள் வந்துள்ளன. புதிய தீர்வை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் போன்ற விவரங்களை வாஷிங்டன் இன்னும் வெளியிடவில்லை.
“நாம் தொடர்ந்து நமக்கு நாமே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம். நீண்டகாலத்திற்கு நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். இதுதான் நாம் எதிர்கொண்டுள்ள புதிய உலகம்,” என்று திரு கான் கூறினார். ஒன் பொங்கோல் சமூக மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
“நமது மீள்திறனையும் போட்டித்தன்மையையும் வலுப்படுத்துவதற்கான பாதையை வரைவதில் நம் பொருளியல் உத்தியில் மறுஆய்வு முக்கியப் பங்கு வகிக்கிறது,” என்றார் வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான்.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசாங்கம், அமெரிக்காவின் உத்தேசப் புதிய 15 விழுக்காட்டுத் தீர்வை பற்றிய விவரங்களை அந்நாட்டிடமிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறது.
அதிபர் டிரம்ப்பிற்குத் தீர்வைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் இல்லை எனக்கூறி அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவற்றை நிராகரித்தது. அதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே செலுத்திய தீர்வையைத் திரும்பப் பெறும் சாத்தியம் குறித்து மேலும் விவரங்களைப் பெறச் சிங்கப்பூர் முனைகிறது. சிங்கப்பூரின் வர்த்தக, தொழில் அமைச்சுப் பேச்சாளர் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22) அதனைத் தெரிவித்தார்.
“சிங்கப்பூர் அரசாங்கம், நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கும். தீர்வைகள், செலுத்திய தீர்வைகளைப் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள் போன்றவை குறித்து அமெரிக்கத் தரப்பிடம் அரசாங்கம் தெளிவுபெற விரும்புகிறது,” என்றார் அந்தப் பேச்சாளர்.
தொடர்புடைய செய்திகள்
அரசாங்கம், முத்தரப்புக் குழுவினருடனும் தொழில்துறையினருடனும் இணைந்து பணியாற்றும் என்று அவர் சொன்னார். சிங்கப்பூர்ப் பொருளியல் மீள்திறன் பணிக்குழுவின் மூலம் அது நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் உரிய நேரத்தில் தகவல்களை வழங்கும் என்றும் பேச்சாளர் குறிப்பிட்டார்.

