தோக்கியோ: அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களின் அன்றாடக் கவலைகளுக்கும் வாழ்வாதாரக் கவலைகளுக்கும் தீர்வுகண்டால் மட்டுமே உலகமயமாக்கல் தொடர்பாக அதிகரித்து வரும் அதிருப்தியை மட்டுப்படுத்த இயலும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள அவர், வியாழக்கிழமை (ஜூன் 11) தோக்கியோவில் நடைபெற்ற 31வது வருடாந்தர நிக்கேய் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசினார். தூதர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்கள் அந்தக் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
உலகமயமாக்கல் பின்னோக்கிச் செல்கிறது என்ற கருத்தை அவர் நிராகரித்தார்.
வரிகள் அதிகரித்து வரும் நிலையிலும் பிரிவினைவாதப் பேச்சுகள், தேசியவாத அரசியல் வளர்ச்சி போன்றவை நிலவும் சூழலிலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் புதிய யுகத்தில் உலகம் நுழைந்துள்ளது.
அத்தகைய யுகம், ஒருங்கிணைந்த விநியோகச் சங்கிலிகள், அதிகரிக்கும் நடமாட்டம் ஆகியவற்றுடன் பருவநிலை மாற்றம், மக்கள்தொகை மாற்றம் போன்ற அவசரமாகப் பகிர்ந்துகொள்ளப்படும் சவால்களால் வரையறுக்கப்பட்டுள்ளது என்று திரு ஓங் குறிப்பிட்டார்.
உலகமயமாக்கல் என்பது நியாயமற்றது, நீதிக்குப் புறம்பானது மற்றும் அச்சுறுத்தலானது என பலர் கருதும் நிலையில், அரசாங்கங்கள் அவர்களின் கவலைகளைக் கேட்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும் என்றார் சமூகக் கொள்கைளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங்.
“உலகமயமாக்கலின் முக்கியத்துவமும் அது தொடர்பான அதிருப்தியும் அதிகரிக்கும் நிலையில் அந்த முரண்பாட்டைச் சீர்ப்படுத்த குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு அது உள்ளாக வேண்டிய நிலை உள்ளது. இதுவே தற்போதைய சவாலின் மையப்புள்ளி.
“பரந்த கண்ணோட்டத்திலான யோசனைகளின் மூலம் உலகமயமாக்கல் இனி விவாதிக்கப்படக்கூடாது என்பது அதன் பொருள்.
தொடர்புடைய செய்திகள்
“மாறாக, பின்தங்கிவிட்டதாக மக்கள் உணர்ந்துவிடக்கூடாது என்பதை உறுதிசெய்ய அரசாங்கங்கள் மக்களின் அன்றாடக் கவலைகளில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று திரு ஓங் தமது உரையில் தெரிவித்தார்.

