அங் மோ கியோ தவிர மற்ற எல்லா நகர மன்றங்களுக்கும் உயர்தர அங்கீகாரம்

2 mins read
f7dd693e-e7cc-477e-ae53-31a3dc2f655e
அங் மோ கியோ நகர மன்றத்திற்கு இரண்டாம்நிலை தரக் குறியீடு வழங்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் அங் மோ கியோ நகர மன்றத்தைத் தவிர மற்ற எல்லா நகர மன்றங்களும் சிறந்த நிர்வாகத் திறனுக்கான பசுமைத் தரச் சான்றிதழைப் பெற்றுள்ளன.

இரண்டு நிர்வாகப் பிரிவுகளைக் கவனிக்கும் அங் மோ கியோ நகர மன்றம் இரண்டாம் நிலை இளமஞ்சள் தரத்தைப் பெற்றுள்ளதாக வியாழக்கிழமை (டிசம்பர் 18) வெளியிடப்பட்ட தேசிய வளர்ச்சி அமைச்சின் அறிக்கை கூறியது.

நகர மன்ற நிர்வாகத் தரத்தை மதிப்பிட மூன்று நிறங்களில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அங் மோ கியோ நகர மன்றம் தனது துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மறுநியமனம் குறித்து மின் அரசிதழில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வெளியிடத் தவறியதற்காக இரண்டாவது தரநிலையை அது பெற்றுள்ளதாக அமைச்சு விளக்கி உள்ளது.

மேலும், தனது இரு வங்கிக் கணக்குகளுக்குத் தேவையான நிதிப் பரிமாற்றங்களை 2024ஆம் நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் கொடுக்கப்பட்டிருந்த சட்டபூர்வ காலக்கெடுவுக்குள் முடிக்கவில்லை.

ஆனால், அந்த இரண்டு செயல்களையும் 2024 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான நிதி ஆண்டில் பின்தேதியிட்டு அந்த நகர மன்றம் மின் அரசிதழில் வெளியிட்டதாக அமைச்சின் அறிக்கை கூறியது.

இவ்வாண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கிய வேளையில் 17 நகரமன்றங்களின் செயல்திறன் குறித்து மறுஆய்வு செய்த விவரத்தை அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த நிதி ஆண்டில், நகரமன்றச் சட்டத்திற்கும் விதிகளுக்கும் உட்பட்ட வகையில் தயார்செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை, கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை போன்றவை மீதான நகர மன்றங்களின் செயல்திறனை அந்த அறிக்கை பிரதிபலித்தது.

மறுஆய்வுக்குப் பின்னர் ஜாலான் காயு, பொங்கோல் என்னும் இரு நகர மன்றங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரிலுள்ள நகர மன்றங்களின் எண்ணிக்கை 19ஆக அதிகரித்தது.

கடந்த ஆண்டு, பீ‌ஷான்-தோ பாயோ நகர மன்றத்திற்கு மட்டும் இளமஞ்சள் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

அண்மைய மறுஆய்வில் அது பசுமைச் சான்றிதழுக்குத் தகுதிபெற்றுவிட்டது.

அங் மோ கியோ குழுத்தொகுதி மற்றும் கெபுன் பாரு, இயோ சூ காங் என்னும் இரு தனித்தொகுதிகளில் அடங்கிய குடியிருப்புப் பேட்டைகளை அங் மோ கியோ நகர மன்றம் நிர்வகிக்கிறது.

மறுஆய்வுக்குப் பின் ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் எல்லா நகரமன்றங்களும் உயர்தர பசுமைச் சான்றிதழைப் பெற்றிருந்தன.

வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை தேசிய வளர்ச்சி அமைச்சு மறுஆய்வு ஆண்டறிக்கையின் இரண்டாவது பகுதி ஆகும்.

குறிப்புச் சொற்கள்