சிங்கப்பூரில் உள்ள குடும்ப நிறுவனங்கள், பொதுவாக, செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவே விரும்புகின்றன. இருப்பினும், அதிகமானவை விடுபட்டுப்போகின்றன. தொழில்நுட்ப நிபுணத்துவமும் மற்ற வசதிகளும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் குறைவாக இருப்பது மூலதனத்தைப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
“பல குடும்ப அலுவலகங்கள், ‘ஓப்பன் ஏஐ’ நிறுவனத்தின் உத்தேசப் பொதுப் பங்கு வெளியீட்டைச் சந்தையின் போக்கை முன்கூட்டியே காட்டும் அறிகுறியாகப் பார்க்கின்றன,” என்று ‘ஃபிலிப் பிரைவேட் இக்விட்டி’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான திருவாட்டி கிரேஸ் டாங் தெரிவித்தார்.
உள்ளூர் முதலீட்டாளர்கள் அதிகக் கவனத்துடன் செயல்படுவதாக அவர் சொன்னார். ஒரு நிறுவனம் எப்போது ஏற்கெனவே போட்ட முதலீட்டை ஈடுகட்டுகிறது என்பதை அவர்கள் ஆராய்வதாகத் திருவாட்டி கிரேஸ் கூறினார்.
உலகெங்கும் உள்ள குடும்ப அலுவலகங்கள் குறித்த அறிக்கையை ‘ஜேபி மார்கன்’ தனியார் வங்கி இவ்வாண்டு (2026) வெளியிட்டது. உலகில் உள்ள குடும்ப அலுவலகங்களில் 65 விழுக்காடு, ‘ஏஐ’ தொழில்நுட்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புவதாக அது குறிப்பிட்டது. குடும்ப அலுவலகங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றுக்கு, ‘ஏஐ’ தொழில்நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்தும் நிறுவனங்களுடன் தொடர்பு இல்லை என்றும் ‘ஜேபி மார்கன்’ அறிக்கை தெரிவித்தது.
சிங்கப்பூரிலும் அத்தகைய போக்கு நன்றாகத் தெரிகிறது.
ஜேபி மார்கனின் குடும்ப அலுவலகச் செயல்முறைப் பிரிவின் உலகளாவிய இணைத் தலைவர் நட்டாச்சா மின்னிட்டி அந்த இடைவெளி இன்றைய போக்கைத் தெளிவாய்க் காட்டுவதாகக் கூறினார்.
“ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள துடிப்பையும் உற்சாகத்தையும் மறுப்பதற்கில்லை. இருப்பினும் ஆரம்பக்கட்ட வாய்ப்புகளைப் பெறுவதில் இன்னமும் உண்மையான சவால் உள்ளது,” என்று அவர் சொன்னார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாகத் தரவு நிலையங்கள், மின்சாரக் கட்டமைப்புகள், இணைப்புக் கட்டமைப்புகள் முதலியவை விளங்குகின்றன. இருப்பினும், 79 விழுக்காட்டுக் குடும்ப அலுவலகங்கள், உள்கட்டமைப்புத் துறையில் சிறிதளவுகூட முதலீடு செய்யவில்லை என்பதை ‘ஜேபி மார்கன்’ கண்டறிந்துள்ளது.

