‘ஏஐ’ இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்; விதிமுறைகளை முடுக்கிவிடும் சிங்கப்பூர்

‘ஏஐ’ இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்; விதிமுறைகளை முடுக்கிவிடும் சிங்கப்பூர்

2 mins read
641b994d-2b43-4bf9-96ba-2349d7702ca0
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் அதிகரித்துள்ள அச்சுறுத்தல். - படம்: யுஆர்பிஇ பல்கலைக்கழகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

சிங்கப்பூரின் முக்கிய உள்கட்டமைப்பு அம்சங்களை நடத்தும் அமைப்புகள் இணையப் பாதுகாப்பைப் பொறுத்தவரை இனி உள்ளூரில் உருவாக்கப்பட்டுள்ள தளத்தைக் கொண்டு ஊடுருவலை அடையாளம் காணவேண்டும்.

அதோடு, இணையப் பாதுகாப்பு விவகாரங்களில் நிர்வாகப் பிரிவினரின் தலையீடு இருப்பதும் கட்டாயமாகிறது. செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களைக் கையாள இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இணையப் பாதுகாப்பு நடைமுறைக் கோட்பாடுகள்

இணையப் பாதுகாப்பு நடைமுறைக் கோட்பாடுகளின்கீழ் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகளில் இந்த விதிமுறைகள் அடங்கும். இணையப் பாதுகாப்பு நடைமுறைக் கோட்பாடுகள் இம்மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும்.

அரசாங்கம் ஒன்றின் நிதி ஆதரவுடன் யுஎன்சி3886 குழு, சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1, சிம்பா டெலிகாம் ஆகிய சிங்கப்பூரின் நான்கு முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்மீது இணையத் தாக்குதலை நடத்தியது. சென்ற ஆண்டு ஜூலை மாதம் அந்தத் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஊடுருவலை அடையாளம் காணும், உள்ளூரில் உருவாக்கப்பட்டுள்ள தளம் தலைதூக்கியுள்ளது.

அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்புகள்

தற்காப்பு அமைச்சின் உத்திபூர்வ தகவல், தொடர்பு தொழில்நுட்பங்களுக்கான நிலையம் அத்தளத்தை உருவாக்கியுள்ளது. அத்தளம் ஏற்கெனவே குறிப்பிட்ட சில அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்பு (சிஐஐ) முறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த 11 அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்புகளிலும் அதைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மிரட்டலாக இருக்கும் நவீனமயமான அச்சுறுத்தல்களுக்கு எதிராகச் சிங்கப்பூரின் தற்காப்பை வலுப்படுத்துவது நோக்கமாகும்.

விமானத்துறை, சுகாதாரம், நிலப் போக்குவரத்து, கடல்துறை, ஊடகம், பாதுகாப்பு, அவசரச் சேவைகள், நீர், வங்கி, நிதி, எரிசக்தி, தகவல் தொடர்பு, அரசாங்கம் ஆகியவை அந்த 11 அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்புகள் உள்ள துறைகளாகும்.

புதிய விதிமுறைகளை வெளியிட்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ, “அதிநவீன அம்சங்களுடன் செயல்பட்டு இணையப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்போர் பலவீனங்களை அடையாளம் காண்பதற்கு அயராது செயல்படுவர். கிடைக்கும் எந்த வாய்ப்பையும் பயன்படுத்தி ஒருங்கிணைக்கப்பட்டுள்ள முறைகளுக்குள் ஆழமாக நுழைய அவர்கள் தயங்கமாட்டார்கள்,” என்று குறிப்பிட்டார். ஆறாவது முறையாக நடைபெறும் செயல்பாட்டில் இருக்கும் தொழில்பத்துக்கான இணையப் பாதுகாப்பு வல்லுநர்க் குழுச் சந்திப்பில் (Operational Technology Cybersecurity Expert Panel Forum) அவர் பேசினார்.

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் அச்சுறுத்தல்

செயற்கை நுண்ணறிவு மேம்பட்டு வருவதால் இணையத் தாக்குதல்கள் அதிநவீனமாக, மிகவும் சவாலானவையாக மாறிவருகின்றன. அதனால், அச்சுறுத்தலாக இருக்கும் தரப்புகளால் பலவீனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிவதோடு பெரிய அளவில் இணையத் தாக்குதல்களை நடத்த முடிகிறது.

அந்த வகையில், முன்பு மனித ஊடுருவிகளின் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட பல இணையத் தாக்குதல்களைச் செயற்கை நுண்ணறிவு, தானியக்கத் தாக்குதல்களாக மாற வழிவகுத்துள்ளதாக செக் பாய்ன்ட் ரிசர்ச் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஏஐசெயற்கை நுண்ணறிவுஅச்சுறுத்தல்இணையப் பாதுகாப்புஊடுருவல்