43 ஆண்டுகளுக்குப் பிறகு, தெம்பனிஸ் பேருந்துச் சேவை கைமாறியது

43 ஆண்டுகளுக்குப் பிறகு, தெம்பனிஸ் பேருந்துச் சேவை கைமாறியது

2 mins read
fdaa0997-cec6-4903-a737-b665dfad3883
1983ஆம் ஆண்டு முதல் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் தெம்பனிசில் பேருந்துச் சேவைகளை இயக்கி வருகிறது. - படம்: எஸ்பிஎஸ் டிரான்சிட் ஃபேஸ்புக்
Google News Preferred Icon

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், 43 ஆண்டுகளுக்குப் பிறகு தெம்பனிஸ் பேருந்துச் சேவையிலிருந்து விடைபெற்றுள்ளது. இதன் மூலம் அந்நகரில் அதன் நீண்டகால செயல்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன.

சனிக்கிழமை (ஜூலை 4) அன்று தனது ஃபேஸ்புக் பதிவில், கனத்த இதயத்துடன், ஆனால் போற்றத்தக்க நினைவுகள் நிறைந்த மனதுடன் வெளியேறுவதாக அந்த நிறுவனம் கூறியது.

பேருந்து ஒப்பந்த மாதிரியின்கீழ் உள்ள 14 தொகுப்புகளில் ஒன்றான தெம்பனிஸ் பேருந்துத் தொகுப்பு, பிடோக் வடக்கு பேருந்து பணிமனையிலிருந்து எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தால் இயக்கப்படும் 27 வழித்தடங்களை உள்ளடக்கியுள்ளது.

$646 மில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கோ-அஹெட் குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் ஜூலை 5ஆம் தேதி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.

தெம்பனிசில் தங்களது வரலாறு 1983ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கியது என்றும் அப்போது தங்களது முன்னோடியான சிங்கப்பூர் பஸ் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின்கீழ், முந்தைய தெம்பனிஸ் பேருந்து முனையத்திலிருந்து இரண்டு பேருந்துச் சேவைகளை இயக்கியதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டது.

அப்பகுதி வளர்ச்சி அடைந்ததால், தெம்பனிஸ், தெம்பனிஸ் கான்கோர்ஸ், தெம்பனிஸ் நார்த் ஆகிய மூன்று பேருந்துச் சந்திப்பு நிலையங்களுக்குச் செயல்பாடுகள் விரிவடைந்தன.

“இந்தப் பயணத்தில், நாங்கள் நட்பையும் நம்பிக்கையையும் ஒரு சமூக உணர்வையும் வளர்த்தெடுத்துள்ளோம்,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் கூறியது. 

எஸ்பிஎஸ் டிரான்சிட், தங்களது பேருந்து ஓட்டுநர்கள், பேருந்து நிலைய மற்றும் பணிமனை ஊழியர்கள் எஸ்பிஎஸ் டிரான்சிட் குடும்பத்தின் ஒரு பகுதியாக ஆற்றிய பணிகளுக்காகவும், நிலப் போக்குவரத்து ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்தது. மேலும், பல ஆண்டுகளாகத் தங்களின் அன்பையும் ஆதரவையும் வழங்கிய தெம்பனிஸ் குடியிருப்பாளர்களுக்கும் அந்நிறுவனம் நன்றி கூறியது.

கோ-அஹெட் சிங்கப்பூர் நிறுவனம், தங்களது செயல்பாடுகளின் தொடக்கத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அன்று ஒரு ஃபேஸ்புக் பதிவில் கொண்டாடியது.

ஈஸ்ட் கோஸ்ட் பேருந்து பணிமனையிலிருந்து செயல்படும் இந்நிறுவனம், தெம்பனிஸ் பேருந்துத் திட்டத்தின் கீழ் 14 பேருந்துச் சேவைகளை இயக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
தெம்பனிஸ்எஸ்பிஎஸ்ஊழியர்கள்