பணவீக்கத்தை ஈடுசெய்ய மாற்றியமைக்கப்பட்ட சம்பளம் 4% உயர்வு

பணவீக்கத்தை ஈடுசெய்ய மாற்றியமைக்கப்பட்ட சம்பளம் 4% உயர்வு

2 mins read
4073a50a-ebd2-46d9-bd31-6249fa2010ce
2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பணவீக்கத்தை ஈடுசெய்ய மாற்றியமைக்கப்பட்ட சம்பளத்தின் வளர்ச்சி, 2024ஆம் ஆண்டின் 3.2 விழுக்காடு உயர்வைவிட அதிகம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025ஆம் ஆண்டில் பணவீக்கம் கணிசமாகக் குறைந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஊழியர்களின் வாங்கும் ஆற்றல் மேம்பட்டுள்ளதுடன் பணவீக்கத்தை ஈடுசெய்வதற்காக மாற்றியமைக்கப்பட்ட அவர்களது சம்பளம் 4 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சு வியாழக்கிழமையன்று (மே 28) வெளியிட்ட சம்பள நடைமுறைகள் குறித்த அறிக்கையின்படி, முதலாளிகளின் மத்திய சேமநிதி பங்களிப்பு உள்ளிட்ட பணவீக்கத்தைக் கருத்தில் கொள்ளாத சம்பளம் 2025ஆம் ஆண்டில் 4.9 விழுக்காடாக அதிகரித்தது. இது 2024ஆம் ஆண்டின் 5.6 விழுக்காட்டுடன் குறைவு.

2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பணவீக்கத்தை ஈடுசெய்ய மாற்றியமைக்கப்பட்ட சம்பளத்தின் வளர்ச்சி, 2024ஆம் ஆண்டின் 3.2 விழுக்காடு உயர்வைவிட அதிகம்.

சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பணவீக்கம் 2025ஆம் ஆண்டில் சராசரியாக 0.9 விழுக்காடாக இருந்தது. இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.4 விழுக்காடாக இருந்தது என்று அதிகாரபூர்வத் தரவுகள் காட்டுகின்றன.

2025ஆம் ஆண்டில் பெரும்பாலான நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவை ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தியபோதிலும் சம்பளம் உயர்த்திய நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் விகிதம் 2025ஆம் ஆண்டில் குறைந்தது.

2024ஆம் ஆண்டில் இந்த விகிதம் 78.3 விழுக்காடாக இருந்தது.

இது 2025ஆம் ஆண்டில் 72.4 விழுக்காடாகச் சரிந்தது.

ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் கொண்டு வராத முதலாளிகளின் எண்ணிக்கையும் கூடியது.

இதற்கான விகிதம் 18.5 விழுக்காட்டிலிருந்து 24.5 விழுக்காடாக ஏற்றம் கண்டது.

சம்பளத்தை உயர்த்திய முதலாளிகளில் பலர், ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே அவ்வாறு செய்ததாகத் தெரிவித்தனர்.

ஆய்வு நடத்தப்பட்ட நிறுவனங்களில் 3.1 விழுக்காடு நிறுவனங்கள் மட்டுமே 2025ஆம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளன.

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த விகிதம் 3.2 விழுக்காடு குறைவு.

இந்தத் தரவுகளைப் பெற ஏறத்தாழ 6,236 நிறுவனங்களிடம் மனிதவள அமைச்சு ஆய்வு நடத்தியது. ஆய்வில் பங்கெடுத்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது பத்து ஊழியர்களைக் கொண்டவை.

ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ஊழியர்களின் சம்பளத்தை ஆய்வின் கண்டுபிடிப்புகள் பிரதிபலிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டில் 83.1 விழுக்காடு வர்த்தக நிறுவனங்கள் லாபம் ஈட்டின.

2024ஆம் ஆண்டில் இந்த விகிதம் 80.8 விழுக்காடாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்