சமூக அளவிலான பருவநிலைத் தகவமைப்புத் திட்டங்களுக்குக் கூடுதல் $5 மில்லியன் ஆதரவு

சமூக அளவிலான பருவநிலைத் தகவமைப்புத் திட்டங்களுக்குக் கூடுதல் $5 மில்லியன் ஆதரவு

2 mins read
017026b8-4bf2-4726-aadd-822f9991de59
வெப்பத்துக்கு எதிரான மீள்திறன், வெள்ளத் தடுப்பு, நீர்ச் சேமிப்பு, உள்ளூர் உற்பத்தியை ஆதரித்தல் ஆகியற்றில் புதிய தொகுப்புத்திட்டம் கவனம் செலுத்தும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சமூகம் வழிநடத்தும் பருவநிலைத் திட்டங்களுக்கு ஆதரவளிக்க, ‘எஸ்ஜி ஈக்கோ’ நிதியின்கீழ் (SG Eco Fund), புதிய பருவநிலைத் தகவமைப்புத் தொகுப்புத்திட்டம் (Climate Adaptation Package) அறிமுகம் காண்கிறது. இதற்கு ஈராண்டுகளில் 5 மில்லியன் வெள்ளி வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (மார்ச் 4) நடைபெற்ற நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது இதனை அறிவித்தார்.

ஏறக்குறைய 500 திட்டங்களுக்கு ‘எஸ்ஜி ஈக்கோ’ நிதி $21 மில்லியனுக்கும் அதிகமான நிதியை 2020ஆம் ஆண்டு முதல் வழங்கியுள்ளது. இத்திட்டங்களில் 700,000க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முக்கியப் பருவநிலைத் தகவமைப்புப் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முழுமையான முயற்சிகளுக்கு நிதியளிக்கும் வகையில் இந்தத் தொகுப்புத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பூமி வெப்பமயமாதலுக்கு எதிரான மீள்திறன், வெள்ளத் தடுப்பு, நீர் சேமிப்பு, உள்ளூர் உற்பத்தியை ஆதரித்தல் ஆகியற்றில் இது முக்கியமாகக் கவனம் செலுத்தும்.

பருவநிலை அபாயங்கள் அதிகரித்து வருவதால், முழுமையான நடவடிக்கைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் ‘எஸ்ஜி ஈக்கோ’ நிதி தனது வரம்பை விரிவுபடுத்துகிறது.

மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, பருவநிலைத் தகவமைப்புத் தொகுப்புத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஆண்டு முழுவதும் பெற்றுக்கொள்ளப்படும்.

மேலும், தகுதிபெற்ற திட்டச் செலவுகளுக்கான நிதியுதவி 80 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடாக அதிகரிக்கப்படும்.

இந்தத் தொகுப்புத்திட்டம் 2026 மே 1ஆம் தேதி செயல்பாட்டுக்கு வரும்.

வேலையிடங்களில் வெள்ளம் ஏற்பட்டால் உதவும் ‘வெள்ள மீள்திறன் மேம்பாடுகளுக்கான வழிகாட்டிக் கையேடு’ உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்துறையினர் தங்கள் வளாகங்களை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க இ்து உதவும்.

பொதுப் பயனீட்டுக் கழகம் தொழில்துறையுடன் இணைந்து இந்த வழிகாட்டிக் கையேட்டை உருவாக்கியுள்ளது. 2026ஆம் ஆண்டின் மத்தியில் கழகத்தின் இணையப்பக்கத்தில் இது வெளியிடப்படும்.

இந்தக் கையேடு, தொழில்துறையின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் அமைவதுடன் நடைமுறை வழிகாட்டல்களையும் வழங்குகிறது.

இதில் வணிக உரிமையாளர்கள் ‘வெள்ள அபாய மதிப்பீட்டு அட்டவணை’ (DIY Flood Risk Matrix) மூலம் சொத்துகளுக்கு ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை தாங்களே மதிப்பிடலாம். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் இது உதவும்.

குறிப்புச் சொற்கள்
நிதிபருவநிலைசமூகம்பொதுப் பயனீட்டுக் கழகம்பாதுகாப்புநாடாளுமன்றம்நீடித்த நிலைத்தன்மைஅமைச்சுஒதுக்கீடு