ஃபேர்பிரைசில் சில பொருள்களின் விலையில் 50% தள்ளுபடி

என்டியுசி, லிங்க் உறுப்பினர்களுக்கு மே தினச் சிறப்புச் சலுகை

ஃபேர்பிரைசில் சில பொருள்களின் விலையில் 50% தள்ளுபடி

2 mins read
22d5bd2d-a1e7-4cb4-8569-f80b2e35949b
ஃபேர்பிரைஸ் இம்மாதம் (ஏப்ரல்) 30ஆம் தேதியிலிருந்து மே 17ஆம் தேதிவரை சில பொருள்களைச் சலுகை விலையில் விற்கவிருக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபேர்பிரைஸ் நிறுவனம், மே தினத்தை முன்னிட்டு என்டியுசி, லிங்க் உறுப்பினர்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்கவிருக்கிறது.

அதன்படி குறிப்பிட்ட சில பொருள்களின் விலையில் 50 விழுக்காடு தள்ளுபடி தரப்படும். இம்மாதம் (ஏப்ரல்) 30ஆம் தேதியிலிருந்து மே 17ஆம் தேதிவரை அவர்கள் சலுகை விலையில் அந்தப் பொருள்களை வாங்கலாம்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் வெவ்வேறு பொருள்களுக்குத் தள்ளுபடி கொடுக்கப்படும். அந்தப் பொருள்களை நேரடியாக வாங்கினாலும் இணையம் மூலம் பெற்றாலும் சலுகை கிடைக்கும்.

பயனீட்டாளர்கள் தள்ளுபடியைப் பெற, லிங்க் ரிவார்ட்ஸ் அல்லது என்டியுசி அட்டையைக் காண்பிக்க வேண்டும் அல்லது ஃபேர்பிரைஸ் குழுமத்தின் (எஃப்பிஜி) செயலியின் வழியாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

உலக அளவில் எரிசக்திக் கட்டமைப்புகளும் விநியோக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் விலைவாசி கூடிவருகிறது.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படியாக வைத்திருக்க வேண்டும் என்ற குழுமத்தின் பரந்த நோக்கங்களில் அண்மைச் சலுகையும் ஒன்று என ஃபேர்பிரைஸ் நிறுவனம் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

முதல் வாரச் சலுகை, மே 3ஆம் தேதியுடன் முடிவடையும். 5 கிலோ எடை கொண்ட ‘டபுள் எஃப்பி தாய் ஹோம் மாலி’ வகை அரிசியின் விலை இப்போது $7.05. வழக்கமாக அதன் விலை $14.10. மேலும் இரண்டு லிட்டர் ஃபேர்பிரைஸ் கனோலா எண்ணெய் விலை மே 3ஆம் தேதிவரை $4.75ஆக இருக்கும். அது $9.50க்கு விற்கப்படுவது வழக்கம்.

அடுத்த தள்ளுபடிகள் மே 7, 14ஆம் தேதிகளில் அறிவிக்கப்படும்.

அன்றாடம் பயன்படுத்தும் பல அத்தியாவசியப் பொருள்களும் பாதி விலைக்கு விற்கப்படுகின்றன. என்டியுசி உறுப்பினர்கள், செயலியைப் பயன்படுத்தி அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கலாம்.

கட்டணத்தைச் செலுத்தும் முன்னர், சலுகைக்கான பற்றுச்சீட்டுகளைப் பெற எஃப்பிஜி செயலிவழி விண்ணப்பிக்க வேண்டும்.

என்டியுசி, லிங்க் உறுப்பினர்கள், உணவுநிலையங்களில் உள்ள கோப்பித்தியாம் கடைகளில் கூடுதல் அனுகூலங்களை எதிர்பார்க்கலாம்.

அதற்காக ஃபேர்பிரைஸ் அறநிறுவனம், கோப்பித்தியாமுடன் கைகோத்துள்ளது. அதன்படி, தீவெங்கும் உள்ள 70 கோப்பித்தியாம் கடைகளில் 50 காசுக்குக் காப்பி அல்லது தேநீரை வாங்கலாம்.

பயனீட்டாளர்கள், வெள்ளி என்டியுசி அட்டையைக் காண்பித்து மே மாதம் முழுதும் சலுகையைப் பெறலாம்.

ஊழியர்களின் செலவைக் குறைக்க என்டியுசி எடுக்கும் முயற்சிகளில் சலுகையும் ஒன்று என்று தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.

“மே தினம் என்பது தொழிலாளர்களின் பங்களிப்பைக் கொண்டாடுவது. வேலையின்போது ஊழியர்களை எதிர்பார்க்கும் அதே நேரத்தில், அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் விலைவாசி உயர்வைச் சமாளிப்பதில் என்டியுசி உதவ விரும்புகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்