சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று தெரிந்தே 500க்கும் மேற்பட்ட சிம் (SIM) அட்டைகளைப் பதிவு செய்ய உதவிய 26 வயது அல் ஹபிர்கான் அல் ஹதிஷ்டிற்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 9) 48 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளை ஹபிர்கான் ஒப்புக்கொண்டார்.
தீர்ப்பின்போது மேலும் 17 குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
கடந்த 2024 நவம்பர் முதல் 2024 டிசம்பர் வரை சிம் அட்டைகளை வாங்க பதின்மவயதினர் இருவரை ஹபிர்கான் வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் மேலும் பலரை அதில் ஈடுபடுத்தினர். அந்த அட்டைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடி அழைப்புகளால் மக்கள் கிட்டத்தட்ட $140,000 இழந்துள்ளனர்.
மோசடி அழைப்புகளைச் செய்ய சிம் அட்டைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பான விசாரணையை 2025ல் சிங்கப்பூர் காவல்துறை மேற்கொண்டது. 22 பேரின் பெயர்களில் சிம் அட்டைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் அனைத்துக்கும் பின்னால் ஹபிர்கான் மூளையாகச் செயல்பட்டிருப்பதும் தெரியவந்தது.
குற்றவாளிக்குத் திட்டவட்டமான நோக்கம் தெரியாவிட்டாலும், சட்டவிரோத லாபத்திற்காகச் செய்த இந்தக் குற்றங்கள் கடுமையானவை என்று அரசுத் தரப்பு வாதிட்டது.

