கையகப்படுத்தப்படவுள்ளது 38 ஆக்ஸ்லி ரோடு சொத்து

கையகப்படுத்தப்படவுள்ளது 38 ஆக்ஸ்லி ரோடு சொத்து

2 mins read
முன்னதாக தேசிய நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டது
06e0e2df-0cbd-4375-952d-a2382f48931f
38 ஆக்ஸ்லி ரோடு சொத்து. - கோப்புப் படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் முதல் பிரதமரான மறைந்த லீ குவான் யூவின் வீடாக இருந்த 38 ஆக்ஸ்லி ரோட்டில் உள்ள சொத்து, கையகப்படுத்தப்படவிருக்கும் சொத்தாக வியாழக்கிழமை (ஜனவரி 29) அறிவிக்கப்பட்டது.

அதன் வரலாற்றுச் சிறப்புக்கும் தேசத்துக்கான அதன் முக்கியத்துவத்துக்கும் ஏற்றவாறு அதைப் பாதுகாப்பது நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி 38 ஆக்ஸ்லி ரோடு சொத்து தேசிய நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“இந்தச் சொத்துப் பகுதியைப் பாதுகாத்து கையகப்படுத்தும்போது அதனை குடியிருப்பு, வர்த்தக, தனியார் தேவைகள் போன்ற காரணங்களுக்காக மேம்படுத்த முடியாது,” என்று சிங்கப்பூர் நில ஆணையமும் தேசிய மரபுடைமைக் கழகமும் வியாழக்கிழமை அறிக்கையில் குறிப்பிட்டன.

2018ஆம் ஆண்டு அமைச்சர்கள்நிலைக் குழு முன்வைத்த பரிந்துரைகள் உட்பட எல்லா தெரிவுகளும் ஆராயப்படும் வரை சொத்தின் வருங்காலம் குறித்து முடிவெடுக்கப்படாது என்றும் தெரிக்கப்பட்டுள்ளது.

போர்க் காலத்துக்கு முன்பிலிருந்து இருக்கும், எட்டு படுக்கையறைகளைக் கொண்டுள்ள இந்த பங்களா வீடு, திரு லீ குவான் யூவின் வீடாக 1940களிலிருந்து 2015ஆம் ஆண்டு அவரின் மறைவு வரை இருந்தது.

கையகப்படுத்திய பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொத்துக் கட்டடங்களையும் அங்குள்ள கட்டடக் கட்டமைப்புகளையும் சோதனையிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க முழுமையான ஆய்வு நடத்துவர். திரு லீ குவான் யூவின் விருப்பப்படி அவர் குடும்பத்தின் அந்தரங்கத்தைப் பாதுகாக்க வீட்டினுள் இருக்கும் திரு லீ தம்பதி பயன்படுத்திய தனிப்பட்ட வாழ்க்கைப் பகுதிகள் (private living spaces) இருந்த அடையாளங்கள் எல்லாவற்றையும் அரசாங்கம் அகற்றும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எந்த சூழ்நிலையிலும் திரு லீ பழக்கப்பட்ட வடிவில் வீட்டின் உட்புறம் வெளியில் காண்பிக்கப்படாது, பதிவுசெய்யப்படாது, மறுவடிமைக்கப்படாது, மாதிரி வடிவம் பெறாது,” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கையகப்படுத்தும் நடவடிக்கையின்போது சிங்கப்பூர் நில ஆணையமும் தேசிய மரபுடைமைக் கழகமும் சொத்தின் உரிமையாளருடன் இணைந்து பணியாற்றும்.

நிலக் கையகப்படுத்தல் சட்டம் 1966ன்படி 38 ஆக்ஸ்லி ரோடு சொத்துக்கு என்ன தொகை வழங்கலாம் என்பது தீர்மானிக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஆக்ஸ்லி சாலைநினைவுச்சின்னம்